பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

315
தந்தநாள் முதலின்பக் கால்சற் றல்லால்
    தடையறஆ னந்தவெள்ளந் தானே பொங்கி
வந்தநா ளில்லைமெத்த அலைந்தே னுன்னை
    மறவாவின் பத்தாலே வாழ்கின் றேனே.
     (பொ - ள்) "எந்தநா . . . தெளிந்ததுண்டோ" - உடையாய் உன் திருவடிக்கு முற்றாக அடியேன் அடிமையாகு நாள் எந்தநாளோ? அதனால் பெற வேண்டிய பேரின்பப் பெருநிலை வந்து பொருந்தும் நாள் எந்த நாளோ? எளியேனுடைய நெஞ்சம் நாளது வரை என்று சொல்லப்படும் இந்நாள் வரைக்கும் மயங்கிக் கலங்குவதல்லால் தெளிவடைந்ததுண்டோ?

     "மௌனியாய் . . . வாழ்கின் றேனே" - நீ பெருந்தண்ணளி பூண்டு உரையற்ற ஒருவனாய் எழுந்தருளி வந்து அடியேன் தெளிவெய்துமாறு ஒப்பில்லா ஒரு மொழி அருளிச் செய்தநாள் முதல், நின்திருவடிப் பேரின்பத்தோற்றம் ஒருசிறிது உண்டாயதல்லால், தடைசிறிதுமில்லாத முழுநிறைவான பேரின்பப் பெருவெள்ளம் தானேபொங்கி வழிந்ததில்லை. அந்நாள் எப்பொழுது வருமோ என்று மிகவும் நொந்தலைந்தேன். மௌனகுருவாய் எழுந்தருளிய உன்திருவருள் நிலையினை மறவாதிருக்கும் இன்பநினைவால் (உடலினின்றும் உயிரை நீக்காது) வாழ்ந்து வருகின்றேன்.

     (வி - ம்.) உலகியலின்பம் அடைதற்கு உறுதுணையாக நிற்கும் காதலருக்குள் பிரிவுஏற்படின் மறவாநினைவோடிருந்து கூடுங்காலத்தை எதிர் நோக்குவதல்லது, மறப்பதனால் ஏற்படும் உயிர்நீக்கத்தினைக் காதலர் மேற்கொள்ளார். அதுபோன்றதே ஆசானை மறவாமல் பேரின்ப நாளை எதிர் நோக்கி இருப்பது. இவ்வுண்மை வருமாறு:

"மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
 உற்றநாள் உள்ள உளேன்."
- திருக்குறள், 1206
"மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
 உள்ளினும் உள்ளம் சுடும்."
- திருக்குறள், 1207.
"குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்
 நறப்பா டலம்புனை வார்நினை வார்தம்பி ரான்புலியூர்
 மறப்பா னடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்றுசென்று
 பிறப்பா னடுப்பினும் பின்னுந்துன் னத்தரும் பெற்றியரே."
- 8. திருகோவையார் - 205.
"துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
 டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து
 பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
 மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே."
- 4: 113 - 7.
(10)