பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

317
     (பொ - ள்) "ஒருமொழியே . . . கண்டாய்" - ஒப்பில்லாத ஓர் உறுதிச் சொல்லாம் "சிவசிவ" என்னும் செந்தமிழ்த்திருமாமறையே ஒரு மொழியாகும்; அம் மொழியே பலவகையான மொழிகட்கும் பெற்றோர்போன்று இடங்கொடுக்கும். அம் மொழியே தொன்மை மலப்பிணிப்பினை அகற்றி யொழிக்கும், ஒழிக்கும் என மொழிந்த அக்குருமொழியே, மாறாமலைக்குறிபோன்று அசையாது நிலைநிற்பது. அம்மொழியல்லாத பிறமொழிகளெல்லாம் பயன்தரக் கூடிய வாயில் இல்லாத வெறுமொழிகளாகும். இதற்கொப்பு சிறுபிள்ளைகள் கோடு கிழியாமல் வட்டாடும் விளையாட்டாகும்.

     "கருமொழியிங் . . . நில்லே" - 'சிவசிவ' யென்னும் செந்தமிழ்த் திருமாமறையினைச் சீர் பெற இடையறாது ஓதிக் கொண்டிருப்பையாயின் இன்னமோர் அன்னைவயிற்றில் தோன்றுவை எனச் சொல்லும் கருமொழி உனக்கு உண்டாவதில்லை. இனிய கரும்பின் திண்ணிய கணுக்களாகிய மொழிக்கு மொழி இன்சுவை தரத்தக்க மேலான சொல்லைக் கொண்டு உன் உண்மையினைக் காட்டியருளவும், நீ கண்டு கொண்டாய்; அதற்கு மேலாக உனக்குப் போதிக்கத்தக்க எந்த மொழியும் இல்லை (ஆதலினால்) உன்னை விட்டு நீங்காது தானே தனிமுதலாகவும், பேரின்பப் பொன்னம்பலமாகவும் இருக்கின்ற சிவனடிக்கீழ் நிற்கக்கடவாய்.

     வட்டாடும் வாய்மை வருமாறு :

"அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
 நூலின்றிக் கோட்டி கொளல்"
- திருக்குறள், 401.
(2)
 
நில்லாத ஆக்கைநிலை யன்றனவே கண்டாய்
    நேயஅருள் மெய்யன்றோ நிலயமதா நிற்கக்
கல்லாதே ஏன் படித்தாய் கற்றதெல்லாம் மூடங்
    கற்றதெல்லாம் மூடமென்றே கண்டனையும் அன்று
சொல்லாலே பயனில்லை சொல்முடிவைத் தானே
    தொடர்ந்துபிடி மர்க்கடம்போல் தொட்டதுபற் றாநில்
எல்லாரும் அறிந்திடவே வாய்ப்பறைகொண்டடிநீ
    இராப்பகலில் லாவிடமே எமக்கிடமென் றறிந்தே.
     (பொ - ள்) "நில்லாத . . . கண்டனையுமன்று" - மாயாகாரியப் பொருளாகிய இவ்வுடம்பு நிலைத்து நிற்கும் தன்மையுடையதன்று என்னும் மெய்ம்மையினைக் கண்கூடாகக் கண்டனை. அனைத்துயிர்களிடத்தும் நீங்கா அருள் கொண்டு நிலைத்து நிற்பது சிவன்திருவருள் ஆற்றல் ஒன்றேயாம்; அத்திருவருளை நிலைத்த புகலிடமாக உறைத்து நிற்க நீ கற்றுக்கொள்ளாமல், வேறுபல பயனில் நூல்களை நீ எதன் பொருட்டுக் கற்று நின்றனை, அங்ஙனங் கற்றதெல்லாம் அறியாமையாக முடிந்தது; அவ்வுண்மையினை நீயுங் கண்டனையன்றோ?