இனியராகக் காணப்படும் ஒப்பில் ஒருவராம் சிவபெருமானே நீங்காத் துணையென்று நெஞ்சமே உணர்வாயாக. அங்ஙனம் உணர்ந்து பத்தியுடன் ஒழுகினால், கொடுமை மிக்க நமன் தூதராகிய காலர்கள் வந்து போர்செய்வரோ? அவர்கட்கு என்ன மாற்றம் உரைப்பதென்று சிறிதும் எண்ணுதல் வேண்டாம்.
(73)
புகழுங் கல்வியும் போதமும் பொய்யிலா | அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே | சுகவி லாசத் துணைப்பொருள் தோற்றமாங் | ககன மேனியைக் கண்டன கண்களே. |
(பொ - ள்) பேரின்பப் பெருவிளையாடல் புரியும் ஆருயிர்த் துணைப் பொருளாம் சிவன் செம்மேனி எம்மான். அவன்றன் அந்தி வானன்ன திருமேனியினைத் திருவருட்டுணையால் கண்டு கும்பிடும் பேறு பெற்ற கண்கள் மிக்க களிப்பினை அடைந்தன. அம்மட்டுமன்று, அப் பேறு பெற்றார்க்குப் பொருள்சேர்புகழும், மெய்யுணர்வுக்கல்வியும், திருவடியுணர்வும், பொய்ம்மையில்லாத வாய்மையே நிலைத்துள்ள நல்லுள்ளமும், அனைத்துயிர்கள்மாட்டும் அகலாது செல்லும் அன்பும் அகலாது வந்து பொருந்தும். அகலாது - நீங்காது.
(74)
கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை | விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை | எண்ணி எண்ணி இரவும் பகலுமே | நண்ணு கின்றவர் நான்தொழுந் தெய்வமே. |
(பொ - ள்) உறுப்புகளுட் சிறந்த கண்ணினுள் நின்றருளும் ஒளியினை, அதுபோல உள்ளத்துள் நின்றருளும் உண்மைக் கருத்தினை, திருவருட்பரவெளியாகிய திருசிற்றம்பலத்துள் நின்றருளும் மெய்ப் பொருளினை, திருவருளால் இடையறாது நாடிநாடி இரவும் பகலும் நண்ணுகின்ற மெய்யடியார்கள் அடியேனால் தொழப்படுந் தெய்வமாவர்.
(75)
தெய்வம் வேறுள தென்பவர் சிந்தனை | நைவ ரென்பதும் நற்பர தற்பர | சைவ சிற்சிவ னேயுனைச் சார்ந்தவர் | உய்வ ரென்பதும் யானுணர்ந் தேனுற்றே. |
(பொ - ள்) விழுமிய முழுமுதற் சிவபெருமானையன்றி மற்றுமொரு தெய்வம் உண்டென மயங்கிக் கூறுவோர், உள்ளத்தால் தள்ளரிய வருத்த மெய்துவர் என்பதும், மேலான நன்மையும், தானே தனிநன்மையும், செந்நெறியாகிய சைவமுதல்வராய் விளங்கும் அறிவும் அளவிலா இன்பமும் வாய்ந்த சிவன்மையும் உடைய உன் திருவடியினைச் சார்ந்தவர் உய்ந்து உயர்வரென்பதும், அடியேன் திருவருளால் ஆய்ந்துணர்ந்தேன்.
(76)