(பொ - ள்) (ஓலியின் பயனை மிகுதியாக அடைவதற்கு வரிவடிவமும் உயிர்களை உணர உடல்வடிவமும் அமைந்திருப்பது போன்று உயிர்கள் உணர்ந்துய்ய இறைவனும் திருவருளின் காரியமாகத் திருவுருக்கொண்டருளுவன். அதுவே திருவுருவம்.) பேரின்பப் பேரொளிக் கொழுந்தே நின் திருவடிப் பேரின்பப் பெருங்கடலில் நின் திருவருளால் புகுந்து திளைத்தற்பொருட்டு இரவு என்றும் பகலென்றும் தோன்றாமல் அன்பினால் உள்ளங்கரைந்து கரைந்து உருகித் தலைமைப்பாடுடைய அண்ணலே! விழைதகு பழைமைசேர் வேந்தே! என அழைத்து அழைத்து அழுகின்ற சேயினைப் போன்று கண்ணீர் பெருக்கிப் பெருக்கிப் பித்துக் கொண்டவனாகிப் பிறவித் துன்பப் பெருங் கடலினை விட்டு விலகுவேனோ?