பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

363
அறிவிற் கறிவு தாரகமென்
    றறிந்தே அறிவோ டறியாமை
நெறியிற் புகுதா தோர்படித்தாய்
    நின்ற நிலையுந் தெரியாது
குறியற் றகண்டா தீதமயக்
    கோதி லமுதே நினைக்குறுகிப்
பிறிவற் றிருக்க வேண்டாவோ
    பேயேற் கினிநீ பேசாயே.
     (பொ - ள்) ஆருயிர்களின் சிற்றறிவிற்கு நிலைக்களமாக உயிர்க்குயிராகிய சிவபெருமானின் பேரறிவு திகழ்கின்றது. அதனையறிந்தே புணர்வு நிலையாகிய அறிவும், புலம்பு நிலையாகிய அறியாமையும் செலுத்தும் புன்னெறியிற் புகுதாமல் ஒருபடியாக நின்ற நிலையுந் தெரியாமல், எவ்வகையான அடையாளமும் இல்லாமல் அனைத்திற்கும் அப்பாலாய்க் குற்றமற்ற பேரின்பப் பெருமருந்தே! அடியேனை வந்து நெருங்கி ஒன்றாய் வேறாய் உடனாய்க்கூடிப் பிரிவற்று வேறற மீளாது ஒன்றியுறைதல் வேண்டாவோ? இனி அடிகளே பேயனைய எளியேனுக்கு நீ உரைத்தருள்வாயாக.

     (வி - ம்.) புணர்வு நிலை - சகலம். புலம்புநிலை - கேவலம், இவ்விரண்டு நிலையினையும் முறையே நினைப்பு மறப் பெனவுங் கூறுப.

(2)
 
பேசா அநுபூ தியை அடியேன்
    பெற்றுப் பிழைக்கப் பேரருளால்
தேசோ மயந்தந் தினியொருகாற்
    சித்தத் திருளுந் தீர்ப்பாயோ
பாசா டவியைக் கடந்தஅன்பர்
    பற்றும் அகண்டப் பரப்பான
ஈசா பொதுவில் நடமாடும்
    இறைவா குறையா இன்னமுதே.
     (பொ - ள்) வாய்பேசாது மௌனமாயிருப்பதற்குக் காரணமான திருவடிப்பேற்றினை அடியேன் பெற்று உய்யுமாறு நின் பெரிய திருவருளால் நின் பேரறிவுப் பேரொளியினைத் தந்தருளி, இன்னும் ஒருமுறை அடியேன் உள்ளத்துள்ள ஆணவவல்லிருளும் நீக்கியருள் வாயோ? மறைத்தலும் மாட்டலும் மயக்கலும் செய்யும் ஆணவம் கன்மம் மாயையாகிய பாசக்காடுகளைத் திருவருளால் கடந்துள்ள மெய்யன்பர்கள் உளமார உணர்வுறப் பத்திவைத்துத் தொழும் எல்லை கூறமுடியாத பெருநிறைவான உடையானே, பொன்னம்பலப் பொதுவின்கண் திருக்கூத்தியற்றும் முதல்வனே, யாண்டும் குறைவிலா நிறைவாகிய பேரமிழ்தே.

     மலமகன்றபின் அனுபூதி பிறக்குமென்னும் உண்மை வருமாறு: