அனைத்தும் முதல்வன் திருமுன் விளங்கித் தோன்றாப் பாழாதலின் பொய்யெனப் புகன்றனர்.
(5)
உய்யும் படிக்குன் திருக்கருணை
ஒன்றைக் கொடுத்தால் உடையாய்பாழ்ம்
பொய்யும் அவாவும் அழுக்காறும்
புடைபட் டோடும் நன்னெறியாம்
மெய்யும் அறிவும் பெறும்பேறும்
விளங்கு மெனக்குன் னடியார்பால்
செய்யும் பணியுங் கைகூடுஞ்
சிந்தைத் துயருந் தீர்ந்திடுமே.
(பொ - ள்.) அடியேன் உய்ந்து பிழைத்து இன்புறும்படி நின் திருவருளொன்றினை உடையானே கொடுத்தருள்வாயானால், பாழ்ம் பிறவியிற்றள்ளும் கொள்ளும் அப் பிறவிக்கு வித்தாம் அவாவும், அழுக்காறும் இருந்த இடந்தெரியாமல் ஒளியைக் கண்ட இருள்போல் உடைந்தோடும்; நன்னெறி யென்று சொல்லப்படும் நிலைத்த மெய்ம்மையும், மெய்யுணர்வும், பெறுதற்கரிய பெரும்பேறும் அடியேனுக்குத் தெளிவாக விளங்கும். விளங்கவே, நின்மெய்யடியார்பால் செய்யும் திருத்தொண்டும் கைகூடும்; உள்ளத்துதுயரமும் ஒழிந்திடும்.
(6)
சிந்தைத் துயரென் றொருபாவி
சினந்து சினந்து போர்முயங்க
நிந்தைக் கிடமாய்ச் சுகவாழ்வை
நிலையென் றுணர்ந்தே நிற்கின்றேன்
எந்தப் படியுன் அருள்வாய்க்கும்
எனக்கப் படிநீ அருள்செய்வாய்
பந்தத் துயரற் றவர்க்கெளிய
பரமா னந்தப் பழம்பொருளே.
(பொ - ள்.) உள்ளத்தை ஓவாது துன்புறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடிய பாவி அடங்காச் சினத்து மூழ்கி அச் சினமே தானாகி வாழ்க்கைப் போர்செய்யப் பல்லோரும் பழிக்கும் படியாக இவ்வுலக வாழ்வினை நிலையுடையது என மயங்க நினைத்து நிற்கின்றேன். திருவருளால் பிறப்புப் பிணிப்பு அற்ற மெய்யடியார்கட்குப் பேரின்பப் பெரும் பேற்றை அளித்தருளுந் தன்மையில் தாய்போன்று எளியராகக் காணப்படும் முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, அடியேனுக்கு எந்த முறையாக உன்திருவருள் வாய்க்கும்? எவ்வகையாக நீ திருவருள் புரிவாய்?