நேசமும்நல் வாசமும்போய்ப் புலனாயிற் | கொடுமைபற்றி நிற்பர் அந்தோ | தேசுபழுத் தருள்பழுத்த பராபரமே | நிராசையின்றேல் தெய்வ முண்டோ. |
(பொ - ள்.) (ஒருவர் ஆசைக்கு அடிமைப்பட்டு அதன்வழி நிறகிலந்த) ஆசையென்று சொல்லப்படும் முடிவில்லாத பெரிய சூறைக்காற்றூடு சிக்கிய இலவம் பஞ்சினை யொத்து எளியேன் மனம் அலைவுற்று அல்லலுறுங்காலம், நீக்கமுடியாத பெருங்கேடு வரும்; இதனால் பலகால் வருந்திக் கற்றதும், சான்றோர் பலர்வாயிலாகக் கேட்ட உறுதுணையாம் நற்கேள்வியும் (நல்ல நீர், அழுக்கு, குப்பை முதலியவற்றால் தூர்ந்து பாழாவது போன்று) தூர்ந்து வீடுபேற்றுக்கான நற்றவக் காதலும், நற்பதி வாழ்க்கையும் நீங்கி, ஐம்புலனுக்கு அடிமைப்பட்டு அவ்வைம்புலனாய், கொடுமை மிக்க உலக வாழ்க்கையில், அழுந்தி நிற்பர். ஐயோ! அறிவொளி மிகுந்து, திருவருள் முதிர்ந்து திகழ்கின்ற மேலாம் மெய்ப்பொருளே! ஒருவர்க்கு அவாவறும் நிலை வாயாவிடிற் பிறவி வாய்ப்பதன்றித் தெய்வநிலை வாய்ப்பதுண்டோ? (உண்டாகாதென்க.)
இவ்வுண்மை வருமாறு :
| "வாசியு மூசியும் பேசி வகையினால் |
| பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை |
| ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் |
| ஈசன் இருந்த இடம்எளி தாமே." |
| - 10. 2568. |
| "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே |
| பேரா இயற்கை தரும்" |
| - திருக்குறள், 370. |
(1)
இரப்பானங் கொருவனவன் வேண்டுவகேட் | டருள்செயென ஏசற் றேதான் | புரப்பான்றன் அருள்நாடி இருப்பதுபோல் | எங்குநிறை பொருளே கேளாய் | மரப்பான்மை நெஞ்சினன்யான் வேண்டுவகேட் | டிரங்கெனவே மௌனத் தோடந் | தரப்பான்மை அருள்நிறைவில் இருப்பதுவோ | பராபரமே சகச நிட்டை. |
(பொ - ள்.) (வேறுபுகலின்றி) இரந்துண்ணும் வாழ்க்கையினை மேற்கொண்ட ஒருவன், (பிறிதொன்றனையும் நோக்காது) தான் வேண்டிக்கொள்ளும் உண்டியினைச் செவியேற்று ஈந்துவந்து காக்கும் வள்ளலாகிய புரப்பான் ஒருவனுடைய வள்ளன்மையாகிய அருளினையே நாடி நிற்பதுபோல், யாண்டும் நீக்கமற நிறைந்து நின்றியக்கும் மெய்ப்பொருளே! திருச்செவிசாத்தியருள்க; வற்றன் மரப்பான்மையினையுடைய நெஞ்சத்தேனாகிய அடியேன் வேண்டுவ