பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

421
தன்னிலே தானாக நினைந்துகனிந்
    தவிழ்ந்துசுக சமாதி யாகப்
பொன்னிலே பணிபோலும் மாயைதரு
    மனமேஉன் புரைகள் தீர்ந்தாய்
என்னினோ யான்பிழைப்பேன் எனக்கினியார்
    உன்போல்வார் இல்லை இல்லை
உன்னிலோ திருவருளுக் கொப்பாவாய்
    என்னுயிர்க்கோர் உறவு மாவாய்.
    (பொ - ள்.) (ஆருயிர்) தன்னுடம்பகத்தே நின்று திருவருளால் தான் உடம்புக்கு வேறென்றும், தான் அறிவுப்பொருளென்றும், அதுவே தன் வடிவமென்றும், உறுதியாக நினைந்து, நெஞ்சங்கனிந்து உருகிச் சிவனுடன் ஒன்றி நிற்பதாகிய சமாதியுண்டாக, பொருண்முதலாம் பொன்னினின்றும் வினை முதலாம் பொற்கொல்லனால் அணிகள் பல வுண்டாதல் போன்று, நுண்ணிய மாயையினின்று வினைமுதலாகிய முதல்வனால் ஆக்கப்பட்டு அளிக்கப்பட்ட மனமே, உன்னால் ஏற்படும் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் தீர்ந்தாயென்னின் யான் பிழைப்பேன்; உன்னைப்போன்று எனக்கு இனிமையுடையவர் ஒருவரும் இல்லை; இல்லை. நினைத்துப்பார்ப்பின், நீ நன்மைக்குத் துணையாக நிற்குந்தன்மையில் திருவருளுக்கு ஒப்பாவை; எனக்கு அறிய உறவுமாவாய்.

    ஆருயிர் உடலுக்குத் தான்வேறெனும் உண்மை உணர்ந்தவழிக் காணும் மெய்ம்மை வருமாறு :

"காரிய மான உபாதியைத் தான்கடந்
 தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
 ஆரிய காரண மாய தவத்திடைத்
 தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே."
- 10. 619
(8)
உறவுடலை எடுத்தவரில் பிரமாதி
    யேனும்உனை யொழிந்து தள்ளற்
கறவுமரி தரிதன்றோ இகபரமும்
    உன்னையன்றி ஆவ துண்டோ
வறிதிலுன்னை அசத்தென்னல் வழக்கன்று
    சத்தெனவும் வாழ்த்து வேனென்
சிறுமைகெடப் பெருமையினின் சென்மதே
    யத்தினில்நீ செல்லல் வேண்டும்.
    (பொ - ள்.) மிகவும் உடலோடு கூடிப்பிறந்த உயிர்கள் அனைத்தும் நான்முகன், மால், புரந்தரன் முதலாகச் சொல்லப்படும்