பரவரிய பரசிவமாய் அதுவெனலாய் | நானெனலாய்ப் பாச சாலம் | விரவிநின்ற விசித்திரத்தை ஐக்யபதத் | தினிதிருந்த விவேகந் தன்னை | இரவுபகல் நினைப்புமறப் பெனுந்தொந்தம் | அறியார்கள் இதயம் வேதச் | சிரமெனவாழ் பராபரத்தை ஆனந்தம் | நீங்காத சிதாகா சத்தை. |
(பொ - ள்.) சொல்லுக்கெட்டாத தூய மெய்ப்பொருளாம் சிவபெருமானை அவன் திருவருளால் அஃது எனச் சுட்டுதற்கேது வாயும், நானெனலாயும், மாயாகாரியப் பொருளாகிய உலகு உடல்களாகியும் விரவிநின்றருளும் வியத்தகு விழுப்பொருளாகியும், பிரிக்க வொண்ணாப் பேரருட் கலப்பினால் புணர்ந்தருளும், மூதறிவினை, இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொடக்குகள் ஏதும் அறியாத திருவடியுணர்வுடையார் தம் மாசிலா மனக்கோயிலை மறைமுடி வெனக்கொண்டு மிக்கோங்கி விளங்கும் மேலாம் மேலாம் மெய்ப்பொருளை, பெயராப் பேரின்பம் பேரறிவுப் பெருவெளியை.
(வி - ம்.) முதல்வன் அறிதற்கரியனாம் நிலையில் அது எனவும், அறியப்படு நிலையில் இது எனவும், தன்னோடுள்ள நிலையில் தன்மையாயும், உலகியற் பொருளுடன் விரவி நிற்றலால் படர்க்கையாயும் சொல்லப்படுவன்.
(6)
அத்துவித அநுபவத்தை அனந்தமறை இன்னம் | இன்னம் அறியேம் என்னும் | நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தைத் | தன்னருளால் நினைவுக் குள்ளே | வைத்துவைத்துப் பார்ப்பவரைத் தானாக | எந்நாளும் வளர்த்துக் காக்குஞ் | சித்தினைமாத் தூவெளியைத் தன்மயமாம் | ஆனந்தத் தெய்வந் தன்னை. |
(பொ - ள்.) மெய்ப்புணர்ப்பாம் அத்துவிதத்தால் நுகரப்படும் நுண்பொருளை; அளவில்லாத வேதங்கள் இன்னும் இன்னும் கண்டறியோமென்று கரையும், அழிவில் பொருளை, நோயில்லாததை, மாயா காரிய முக்குணமில்லாததை, தன்னருளினால், உள்ளத்தினுள்ளே வைத்து ஓவாதுணரும் மெய்யன்பரைத் தன் வண்ணமாக எஞ்ஞான்றும் திருவருளால் வளர்த்துக் காத்தருளும் அழிவில் பேரறிவை, அளவிடப்படாத பெரிய தூவெளியை, தன்மயமாகக் காணப்படும் பேரின்பப் பெருந்தெய்வந்தன்னை.
(7)