எனப்படும் கங்கைத் துளியாடவும் பொன்மன்றின்கண் பேரின்பத் திருக்கூத்தாடும் மூன்று திருக்கண்களையுடைய உண்மை அறிவின் பத்தோங்கும் சுடர்க்கொழுந்தே!
(வி - ம்.) அடியார் மனவெளியில் ஆண்டான் விரவுதலென்பது இதுகாறும் ஆருயிர்கட்குச் செவ்வி முதிர்தற்பொருட்டு உடனாய்நின்று அவ்வாண்டானின் நீங்கா வுண்மையினையுணர்த்தாது மறைத்து நீங்கு நிலையாகிய திருக்கோலங்களைச் சிறிதுணர்த்தி, இருவினை தீர்தற் பொருட்டு நுகர்வுக்கேதுவாம் உலகியற் புலன்களைப் பெரிதுணர்த்தி வந்த நடப்பாற்றலாகிய மறைப்புச்சத்தி மாறி வனப்பாற்றலாகி திருவருட் சத்தியாய்த் திகழ்ந்து சிவ விளக்கத்தினைக் கூட்டக்கூடுத லென்பதாம். நடப்பாற்றலெனினும் மறைப்பாற்றலெனினும் ஒன்றே. மறைப்பாற்றல் -திரோதான சத்தி. வனப்பாற்றல் - பராசத்தி. 1 உள்ள வெளிக்கண்ணிறைவன் ஓங்கல் மறைப்பாற்றல்-விள்ளவுடனாதல் விளம்பென்ப.
(6)
கொழுந்தா துறைமலர்க் கோதையர் மோகக் குரைகடலில்
அழுந்தாத வண்ணம்நின் பாதப் புணைதந் தருள்வதென்றோ
எழுந்தா தரவுசெய் எம்பெரு மான்என் றிறைஞ்சிவிண்ணோர்
தொழுந்தா தையேவெண் பொடிபூத்த மேனிச் சுகப்பொருளே.
(பொ - ள்.) எங்கட்குயிர்க்குயிராய்த் திகழும் சிவபெருமானே! திருவருள் சுரந்து எழுந்து ஆதரவு செய்தருள்வாயாக வென்று சிவவுலகத்து வாழும் விண்ணோர் தொழுந் தந்தையே! வெள்ளிய திருவெண்ணீற்றினை அடியார்கட்கு அருளுதற்பொருட்டுப் பூசியருளும் பேரின்பப் பெரும் பொருளே! செழுமையாகிய பூந்தூள் நிறைந்த மலர் சூடிய பெண்களிடத்து அவர்தம் மயக்கிற்பட்டுப் பெருவேட்கையாகிய ஆரவாரிக்கும் மோகக்கடலுட்பட்டு அழுந்தாவண்ணம், நின் திருவடிப்புணையினைத் 2 தந்தருளி ஆட்கொள்வது எந்த நாளோ? திருவடிப்புணையென்பது திருவைந்தெழுத்தாம். திருவள்ளுவ நாயனாரும் இறைவனடியினையே புணையென்றனர்.
(7)
சுகமாகு ஞானந் திருமேனி யாநல்ல தொண்டர்தங்கள்
அகமேபொற் கோயில் எனமகிழ்ந் தேமன்றுள் ஆடியகற்
பகமேஉன் பொன்னடி நீழல்கண் டாலன்றிப் பாவிக்கிந்தச்
செகமாயை யான அருங்கோடை நீங்குந் திறமிலையே.
(பொ - ள்.) பேரின்பப் பேரூற்றிற்கு ஏதுவாகிய மூதறிவு எனப்படும் சிவஞானமே திருமேனியாகவும், நன்மை மிக்க திருத் தொண்டர் தங்களுடைய மாறாத திருவடி நினைவுசேர் செம்மையுள்ளமே திருக்கோவிலாகவும் கொண்டு அகமிக மகிழ்ந்து பொற்பொது வின்கண் திருக்கூத்தியற்றியருளும் கற்பகமே, உன் பொன்போலும்