நிலையினைப் பெறாது எளியேன் அறிவு பொல்லாத பிறப்பினை விளைக்கவல்ல பொறி புலன்களிற் செல்லுதற்கோ தாவிச்செல்லும் மான்போன்று துள்ளிப்பாய்கின்றது.
(10)
ஆறொத் திலங்கு சமயங்கள் ஆறுக்கும் ஆழ்கடலாய் | வீறிப் பரந்த பரமான ஆனந்த வெள்ளமொன்று | தேறித் தெளிந்து நிலைபெற்ற மாதவர் சித்தத்திலே | ஊறிப் பரந்தண்ட கோடியெல் லாம்நின் றுலாவியதே. |
(பொ - ள்.) பெருங்கடலிற் போய்க்கூடும் ஆறுகளையொத்து அகச்சமயங்கள் ஆறும் காணப்படும்; அத்தகைய சமயத்தார் வந்து பேறடைதற்குரிய பேரருட் பெருங்கடலாய்ப் பிறிதொன்றிற்கில்லாத பெருமையையுடைய மேலான பேரின்பப் பெருவெள்ளமொன்று, திருவருளால் மெய்ம்மையுணர்ந்து தெளிந்து உறுதியாக நிலைபெற்ற பெருந்தவத்தோருள்ளத்தின் கண்ணே ஊற்றெடுத்துப் பரந்து கசியும் படி அண்டகோடிகளெல்லாம் நின்று பரந்தன.
(வி - ம்.) ஏனைய முக்கூற்றுப் புறச்சமயங்களும் சிவபெருமான் திருவடி மெய்ம்மையுணராது இடைநின்று முடிவன. அவற்றிற்கு ஒப்பு சில ஆறுகள் கடலிற்போய்க் கலவாது, இடையே நின்று விடுவனவாகும்.
(11)
நடக்கினும் ஓடினும் நிற்கினும் வேறொரு நாட்டமின்றிக் | கிடக்கினுஞ் செவ்வி திருக்கினும் நல்லருட் கேள்வியிலே | தொடக்கும்என் நெஞ்சம் மனமற்ற பூரணத் தொட்டிக்குளே | முடக்குவன் யான்பர மானந்த நித்திரை மூடிடுமே. |
(பொ - ள்.) நடந்தாலும், ஓடினாலும், நின்றாலும் பிறிதோர் எண்ணம் சிறிதும் இன்றி, கிடந்தாலும், செம்மையாக இருந்தாலும், சித்தாந்தச் செல்வர்பால் கேட்கும் நல்லருட்கேள்வியில், எளியேனுடைய நெஞ்சம் கட்டுப்பட்டு அமைந்து நிற்கும்; அடியேன் மன மிறந்த முழுநிறைவாந் தொட்டிக்குள் முடங்கிக் கிடப்பின், அப்பொழுது பேரின்பப் பேறுறக்கம் எளியேனை வந்து மூடிக்கொள்ளும்.
(12)
எண்ணாத தெண்ணிய நெஞ்சே துயரொழி என்னிரண்டு | கண்ணே உறங்குக என்னாணை முக்கட் கருணைப்பிரான் | தண்ணார் கருணை மவுனத்தி னால்முத்தி சாதிக்கலாம் | நண்ணாத தொன்றில்லை யெல்லா நலமு நமக்குளவே |
(பொ - ள்.) மனமே! ("ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுப, கோடியுமல்ல பல") எண்ணத்தகாத எண்ணங்களை இடையறாது அளவிறப்ப எண்ணி எய்தும் துன்பத்தினின்று நீங்குவாயாக; என்னிரு கண்களே! கவலையின்றி நன்றாக உறங்குவாயாக; என்மேல்