பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

452
பொருந்தினவர்களுக்கு மட்டுந்தான் நிலையில்லாமல் மாறிமாறி வந்து கொண்டிருக்கும் பிறவிப் பெரும்பிணி அற்றொழியும்.

     (வி - ம்.) "வேண்டுதல் வேண்டாமை யிலானடி" சேர்ந்து சிறப்புற்று வாழ்தற்கு ஆருயிர்களும் திருவருளால் அவ்விரண்டினையும் கைக்கொள்ளுதல் வேண்டும். அவற்றைக் கைக்கொண்டதன் முடிவே நிட்டையென்பதாகும்.

(8)
மாயா சகத்தை மதியாதார் மண்முதலா
யேயான தத்துவத்தில் எய்துவரோ - நேயானு
பூதிநிலை நிற்கப் பொருந்துவர்கள் அன்னவர்தம்
நீதியையே ஓர்மனமே நீ.
     (பொ - ள்.) நெஞ்சமே, மாயாகாரிய உலகினை நிலையான தோற்றக்கேடில்லாத மெய்ப்பொருளென மனங்கொள்ளாதார், நிலமுதலாக மாயை முடிவாகச் சொல்லப்படும் மெய்யெனப்படும் தத்துவக்கூட்டங்களில் பற்றுக்கொண்டு தம்மைப் பிறவிப் பெருங்கடலுள் ஆழ்த்துதல் செய்வரோ? பேரன்பால் விளையும் சிவப்பேற்று நிலையினைத் திருவருளால் நீங்கா உறுதியெனக் கொண்டு நிலையிற்றிரியாது நிற்பர். அன்னவர் கைக்கொண்டொழுகும் நன்னெறிமுறையினையே, நீ ஆய்ந்து கடைப்பிடிப்பாயாக. சிவப்பேறு - சிவானுபூதி.

(9)
இகமுழுதும் பொய்யெனவே ஏய்ந்துணர்ந்தா லாங்கே
மிகவளர வந்தஅருள் மெய்யே - அகநெகிழப்
பாரீர் ஒருசொற் படியே அனுபவத்தைச்
சேரீர் அதுவே திறம்.
     (பொ - ள்.) இவ்வுலக வாழ்வில் நுகரும் நுகர்வுகளனைத்தும் நிலையில்லாதன, பற்றறாமைக்கு ஏதுவாவன; பிறப்பைத் தருவன என உணர்ந்துகொள்ளுங்கால், அப்பொழுதே மேலோங்கி வளரச்செய்யுமாறு வந்துள்ள திருவருள் நிலை கைகூடிற்றென்பது மெய்யாகும். மோன குருவானவர் உள்ளமுருகி நெகிழுமாறு அறிவுறுத்தருளிய 'சிவ' என்னும் செந்தமிழ்த் திருமாமறையினைக் கடைப்பிடித்துப் பேற்று நிலையாகிய அனுபூதியினைச் சேர்வீராக. 1 இஃதொன்றே உறுதி பயக்கும் உண்மையாகும்.

(10)
ஆரணங்கள் ஆகமங்கள் யாவுமே ஆனந்த
பூரணமே உண்மைப் பொருளென்னுங் - காரணத்தை
ஓராயோ உள்ளுள்ளே உற்றுணர்ந்தவ் வுண்மையினைப்
பாராயோ நெஞ்சே பகர்.
     (பொ - ள்.) நெறி நூலாகிய மறைகளும், துறை நூலாகிய முறைகளும், இவற்றின் சார்பாகிய ஏனைய நூல்களும் பேரின்பப் பெருநிறைவாகிய பெருமானே மாறிலா மெய்ப்பொருளென்று ஓதுங்காரணத்தை,

 1. 
'மனிதர்காளிங்கே' 5. 91. 7.