(பொ - ள்.) சுட்டியுணரப்படும் இவ்வுலகம் மாயாகாரியம். தோன்றியொடுங்கும் தொழிலுடையது. அதனால் அதனைப் பொய் யெனக்கூறுவர்; (பொய்யென்பது நிலையாமையுடைய தென்பதாம்.) இவ் வுண்மையினை உள்ளவாறு உணர்ந்தால் இம்மைக்கண் அடையும் துன்ப இன்பங்கள் நிலையாமையை உடைய பொருள்களாமன்றோ? அவற்றைக் கொள்ளாது, தளராமல் இம்மையிலும் மறுமையிலும் விட்டு நீங்காத மிக மேன்மை படைத்த மெய்ப்புணர்ப்பாம் அத்துவிதக் கட்டுக்கு உள்ளாவது எந்த நாளோ? (எளியேன் அறிகின்றிலேன்.)
(6)
கற்கண்டோ தேனோ கனிரசமோ பாலோஎன் | சொற்கண்டா தேதெனநான் சொல்லுவேன் - விற்கண்ட | வானமதி காண மவுனிமவு னத்தளித்த | தானமதில் ஊறும்அமிர் தம். |
(பொ - ள்.) மிக்க ஒளி பொருந்திய மேலான திங்கள்மண்ட லத்தைக்கண்டு கும்பிடுக என்று மவுனகுரு செவியறிவுறுத்திய அத் திங்கள் மண்டலத்திலூறுந் தூய அமிழ்தப்பாலின் சுவை கற்கண்டுதானோ. தேனோ, தீம்பழச் சாறோ, ஆன்பாலோ, அடியேன் வரையறுத்துச் சொல்லும் சொற்கு அடங்காது; அடியேன் என்ன எனச் சொல்லுவேன்? சொற்கண்டாது - சொற்கு அண்டாது.
(வி - ம்.) வில் - ஒளி. மூலத்திடத்தில் கீழ்நோக்கிய முகமாகக் கண்களை முகிழ்த்து ஆண்டுள்ள தூமாயை ஆற்றலென்னும் குண்டலிசத்தியினை, அகத்தவ முறையால் அடக்கிய உயிர் மூச்சினால் அகத்து மண்டலத் தீயினை மூட்டி எழுப்பி மூல முதல் புருவநடுமுடிவாக ஆறிடங்களிலும் சென்றால் திங்கள்மண்டிலத்தினின்றும் மெய்யமிழ்தப் பெருக்கம் சிந்தும்; சிந்தும் அப் பெருக்கத்தினை உண்மடுத்து ஓவா இன்புற்று வீற்றிருப்பர், சிவயோகியர். அத்தகைய இன்பினைத் தான் நுகரும்படி மவுனகுரு தமக்கருளினரென்றோதினர். ஆறிடங்கள் வருமாறு :
1. மூலம் 2. கொப்பூழ் 3. மேல்வயிறு 4. நெஞ்சம் 5. மிடறு 6. புருவநடு என்பன. இடங்களெனினும் நிலைகள் எனினும் ஒன்றே. இவற்றை முறையே மூலாதாரம், சுவாதிட்டாணம், மணிபூரகம், அநாகதம், விசுத்தம், ஆக்கினேயம் எனவுங்கூறுப.
(7)
கேட்டலுடன் சிந்தித்தல் கேடிலா மெய்த்தெளிவால் | வாட்டமறா வுற்பவநோய் மாறுமோ - நாட்டமுற்று | மெய்யான நிட்டையினை மேவினர்கட் கன்றோதான் | பொய்யாம் பிறப்பிறப்புப் போம். |
(பொ - ள்.) மெய்ந்நூல்களைத் தக்க ஆசான்பால் முறையுறக் கேட்டலும், கேட்டவற்றைப் பயிற்சி வாயிலாக நாடுதலும், குற்றமற்ற உண்மைத் தெளிவால் உணர்விற்றெளிதலும் ஆகிய இவற்றால் மட்டும் சோர்வில்லாத பிறவிநோய் அற்றுவிடுமோ? குறிக்கொண்டு நோக்கி மெய்யான திருவடியுறைவாம் நிட்டையினைத் திருவருளால்