இன்னும் கைவரவில்லை. அங்ஙனமிருப்பின் அவர்தமக்குத் தம்மைத் தாம் ஒப்புவித்த அடிமை என்னும் மெய்ப்பெருநிலை வந்து பொருந்துமா றெப்படி?
(வி - ம்.) செந்தமிழ்ச் சிவஞான போதமென்னும் மெய்கண்ட முழு முதனூலைத் திருவருளால் உள்ளவாறோதியுணர ஒப்புவித்த அடிமையென்னும் மெய்ப்பெருநிலை தானேவந்து கைகூடும்.
(3)
அறியாமை மேலிட் டறிவின்றி நிற்குங் | குறியேற் கறிவென்ற கோலம் - வறிதேயாம் | நீயுணர்த்த நான்உணரும் நேசத்தா லோஅறிவென் | றேயெனக்கோர் நாமமிட்ட தே. |
(பொ - ள்.) (அறிவு விளங்காமை அல்லது மேலிடாமை யெனப்படும்) அறியாமை மேலிட்டு அறிவு ஆணவமல வாற்றலால் சிறிதும் விளங்காது நிற்கும் குறிக்கோளினையுடைய அடியேனுக்கு அறிவுருவன் என்ற கோலம் வீணேயாம். நீ தண்ணளியால் உணர்த்தியருள அடியேன் உணர்ந்துறும் அன்புத்தொடர்பால் எளியேனுக்கும் அறிவன் என்ற பெயரிடப்பட்டது போலும்.
(வி - ம்.) சுதந்திரம் - தன்வயமுடைமை. பரதந்திரம் - பிறர் வயமுடைமை. செல்வனையடுத்த வறியனும் செல்வனென்று பெயர் பெறுவது மேலதற்கொப்பாம்.
(4)
எதுக்குச் சும்மா இருமனமே என்றுனக்குப் | போதித்த உண்மைஎங்கே போகவிட்டாய் - வாதுக்கு | வந்தெதிர்த்த மல்லரைப்போல் வாதாடி னாயேயுன் | புந்தியென்ன போதமென்ன போ. |
(பொ - ள்.) நெஞ்சமே! என்ன காரணத்துக்காக நீ உண்முகப்படாமல் வெளிமுகப்பட்டு வீணாக அலைந்து அல்லற்படுவது? உண்முகப்பட்டுச் சிவனே என்று எந்நாளும் இருப்பாயாக என்று உனக்குச் செவியறிவுறுத்திய உண்மையினை எங்கே போகவிட்டனை? வீணாக வழக்கிட வந்து எதிர்த்த மல்லரைப்போன்று வீண்வழக்குச் செய்வதனாலேயே, உன்னுடைய துணிவும் அறிவும் என்ன என்று கூறுவது? ஒழிந்துபோவாயாக.
(வி - ம்.) உண்முகம் - அந்தர்முகம். வெளிமுகம் - பகிர்முகம். போதித்த உண்மை - உபதேசம். இதுவே செவியறிவுறூஉ - சும்மாவிரு வெனச்சொல்லும் மறைமொழி. சும்மா இரு என்பது சிவனே என்றிருவென்பதுதான்.
(5)
சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க | சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா - திகபரத்தும் | விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக் | கட்டுக்குள் ஆவதென்றோ காண். |