(பொ - ள்.) நெஞ்சே! நேரே காண்டற்குரிய நிலமுதலாகச் சொல்லப்படும் பூதங்களைந்தும் மெய்ப்பொருளுண்மையான் நோக்குங்கால் அம் முழு முதல்வனின் உடம்பாக நிற்குந்திறத்தினை அறிவாயாக. மாறுதலின்றி என்றும் ஒரு நிலையாக நின்றருளும் திருவருளினை யல்லாமல் இனிமேல் தெரிந்துகொள்ளவேண்டிய வழி யாதுளது? (ஏதும் இல்லையென்பதாம்.)
(வி - ம்.) "நிலம் நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன், புலனாய மைந்தனோடு எண் வகையும்" முதல்வன் இயைந்து நின்றியக்கும் இயல்பினால் அவை அவன் திருமேனியென்று அணிந்துரைக்கப்படும். உயிர் - காற்று. மைந்தன் - ஆருயிர். விளக்கிருக்கும் இடமும் விளக்கெனக் கூறப்படுவது போன்று இவையனைத்தும் அவனேயானான் 1 என்று கூறப்படுவதுமுண்டு. அது புனைந்துரையேயாம். ஆனான் என்பது ஆக்கினான் என்பதாம்.