பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

479

உபதேசமருளி நின்றதற்கோ, அடியேனை நிலையிலாமாயா மெய்களின் கூட்டத்தினின்றும் பிரித்துத் தன் திருவடியினின்றும் பிரியாம லிருத்தற்பொருட்டு அம்மாயாகாரியப் பொருள்களின் மயக்கத்தினை அடக்கியதற்கோ? (அறிந்திலேன் அனைத்திற்கு மேயாம்.)

     (வி - ம்.) பெண்பாலார் பிறந்திடத்தினின்றும் பிரிந்து சிறந்திடமாகிய காதலன்கைப் பற்றி அவன் வீடெய்துவது பொற்புறுகற்புடன் அற்புறுபுணர்ச்சியால் ஆராஇன்பந்துய்ப்பதற்கேயாம். இது போல் ஆருயிர் மௌனகுருவுடன் செல்வது சார்ந்திருந்த மாயை மயக்கினின்றும் நீங்கி நிலையான அவன் திருவடியிற் சார்ந்து பேரின்பம் உறுதற்கேயாம்.

(79)
குறியுங் குணமுமறக் கூடாத கூட்டத்
தறிவறிவாய் நின்றுவிட ஆங்கே - பிறிவறவுஞ்
சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோனநின்பால்
கைம்மாறு நானொழிதல் காண்.
     (பொ - ள்.) (திருவெண்ணீறு, சிவமணி, திருவைந்தெழுத்து ஆகிய) திருவடையாளங்களும், திருவருட் குணங்களும் ஒரு காலத்தும் நீங்கப் பெறாத (ஏனையோரால்) சென்று கூடுதற்கரிய சிவனடியார் திருக்கூட்டத்து அவர்தம் பேரறிவே அடியேன் அறிவாய் நின்றிடவும், பிரிதலின்றி மோனமாயிருக்கச் செய்து பேரின்பம் நிறைத்தருளிய மோனகுருவே! நின்திருவடிக்கு அடியேன் செய்யும் கைம்மாறு நானொரு தனிமுதல் என்னும் எண்ணமொழிந்து, நின்னொடு புணர்ந்து நீக்கமற நின்று நிறையின்பநுகரும் நீங்கா அடிமையென நிற்பதேயாம்.

     (வி - ம்.) காதலனை வீட்டைக் கனியின்பைச் சார்ந்துணரும், காதலியக் காதலற்காள் காண் எனக் கூறுவது போன்று ஆருயிர் ஆண்டானுக் கென்றும் அடிமையேயாம். ஆள் - அடிமை.

(80)
நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால் என்னாணை
வானதான் எனநிறைய மாட்டாய்நீ - ஊன்றாமல்
வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து
துய்த்துவிடும் ஞான சுகம்.
     (பொ - ள்.) மனமே! நான் என்னும் அகப்பற்றும், எனதென்னும் புறப்பற்றும் ஆகிய செருக்கு வந்து பொருந்துமிடத்து என் மேலாணையிட்டுக் கூறுகின்றேன் வான் போன்று பேரறிவின்கண் நீ நிறைந்து நிற்க மாட்டாய்; நீ முன்னிலைச் சுட்டுப் பொருள்களிற் சென்று பற்றி நிற்கும் பற்றிலூன்றாமல் உன்பால் (மோனகுரு) வைத்தருளிய மவுனத்தாலே மாயை மயக்க மடங்கி எங்கு நிறைந்துள்ள பேரின்பப் பேரறிவினைத் துய்த்துக் கொண்டு எங்கு நிறைந்து நிற்பாயாக.

     (வி - ம்.) யான் என்பது அகப்பற்று. அகப்பற்று - அகங்காரம். தான் என்பது புறப்பற்று. புறப்பற்று - மமகாரம்.

(81)