பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

481

     (பொ - ள்.) பயனிலாச் செயல்களில் பாடுபட்டுழலும் பாழ் நெஞ்சே! சிறிதுங் குற்றமில்லாத உரையற்ற மோன நிலையிலேயே எம்தந்தையாகிய சிவபெருமான் முழு நிறைவானதும் மாசில்லாததும் ஆகிய திருவடிப் பேரின்பப் பெருக்கைத் துய்ப்பித்தருளுவன்; நிலையில்லாத உலகியற் பழக்கத்தால் பல முறையும் பாசத்தளையுட் செல்லாது நன்னெறிச் செல்லுவாயாக.

(1)
பாழாகி அண்டப் பரப்பை எலாம் வாய்மடுத்தும்
ஆழாழி இன்பத் தழுந்தப் படியாயோ
தாழாயோ எந்தையருள் தாள்கீழ்நெஞ் சேஎனைப்போல்
வாழாது வாழ்ந்தழியா வண்ண மிருப்பாயே.
     (பொ - ள்.) நெஞ்சே, வீணாகி உலக விரிவுகள் அனைத்தையும் நின்னதாக்கி (உழல்வதைவிட்டு) ஆழ்ந்த பேரின்பப் பெருங்கடலுள் திருவருளால் மூழ்கி மாறாஇன்பம் எய்தக் கற்றுக் கொள்ளாயோ? காலந்தாழ்த்தாது எந்தையாகிய சிவபெருமானின் திருவடிக்கீழ் வணங்கி வாழ்த்தி இணங்கி எளியேனைப்போல் அழிவின்றி நீயும் இருப்பாயாக.

(2)
இருப்பாய் இருந்திடப்பே ரின்பவெளிக் கேநமக்குக்
குருப்பார்வை யல்லாமற் கூடக் கிடைத்திடுமோ
அருட்பாய் நமக்காக ஆளவந்தார் பொன்னடிக்கீழ்
மருட்பேயர் போலிருக்க வாகண்டாய் வஞ்சநெஞ்சே.
     (பொ - ள்.) எய்ப்பில் வைப்பாங் கருவூலமாய் உண்டாகும் பொருட்டுச் சிவகுருவின் திருக்கடைக்கணோக்கமாம் திருவருள் வந்து கைகூடாமல்1 பேரின்பப் பெருவெளியாம் திருச்சிற்றம்பலம் கிடைத்திடுமோ? நம் பொருட்டுத் திருவருள் பரப்பி ஆண்டுகொண்டருள எழுந்தருளிவந்த மோன குருவின் திருவடிக்கீழ் உலக மயக்கத் திலாழ்ந்து பேய் பிடியுண்டார் போலமைந்திருக்க என் நெஞ்சமே! என்னுடன் வருவாயாக.

     (வி - ம்.) இருப்பாய் - கருவூலமாய். அருட்பாய் - அருட்டன்மை முற்றும் பரப்பி. பேரின்பவெளி - தில்லைத்திருச்சிற்றம்பலம்.

(3)
வஞ்சமோ பண்டையுள வாதனையால் நீஅலைந்து
கொஞ்சமுற் றாயுன்னைக் குறைசொல்ல வாயுமுண்டோ
அஞ்சல் அஞ்சல் என்றிரங்கும் ஆனந்த மாகடற்கீழ்
நெஞ்சமே என்போல நீயழுந்த வாராயோ.
     (பொ - ள்.) மனமே, நீ செய்வது மிக்க வஞ்சனையோ? அல்லது பழம் பயிற்சியோ? நீ இவ்வுலகில் சிறுமை யெனப்படும் கொஞ்சத் தனையடைந்தாய்; உன் பேரில் குற்றஞ் சொல்வதற்கு வாயும் உண்டோ?

 
 1. 
'மந்திரத்தால்.' சிவஞானசித்தியார், 12. 3 - 4.