அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட் டோட அதன்பிறகே | ஓடுந் தொழிலாற் பயனுளதோ ஒன்றாய்ப் பலவா யுயிர்க்குயிராய் | ஆடுங் கருணைப் பரஞ்சோதி அருளைப் பெறுதற் கன்புநிலை | தேடும் பருவம் இதுகண்டீர் சேர வாருஞ் சகத்தீரே. |
(பொ - ள்.) நொடிப்பொழுதுகூட அமைதியில்லாமல் காட்டிலும் மேட்டிலும் ஓய்வின்றி ஓடி உழலும் குரங்கை யொத்த மனத்தின் பின் ஆய்வின்றி நாமும் ஓடுந் தொழிலால் பெறும் பயன் ஏதும் இல்லை; கலப்பினால் ஒன்றாப்ப் பொருட்டன்மையால் வேறாய், உயிர்க்குயிராய் நின்று உதவுந்தன்மையால் உடனாய் நின்றருளும் சிவபெருமான் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் 1ஐம்பெருந் திருக்கூத்தினையும் ஆடியருளும் பேரறிவுப் பெருஞ்சுடராவன்; அவனுடைய திருவருளைப் பெறுதற்கு வேண்டிய இறவாத இன்ப அன்பு நிலையினைத் தேடும் நற்பருவம் இதுவாகும்; அதனால் உலகவரே சேர வருவீராக.
(வி - ம்.) முழு முதல்வனாம் சிவபெருமான் ஆருயிர்கள் உறைந்துய்யத் திருவருள் வெளியில் அன்பினால் யாண்டும் இடமளித்துக் கொண்டிருப்பதால் பலவாகியும், அங்ஙனம் கலப்பினால் பலவாக நிற்பினும் பொருட்டன்மையாம் பேரறிவால் வேறாகியும்; ஆருயிர்களின் அன்பறிவாற்றல்களைத் தன் அன்பறிவாற்றல்களைக் கொண்டு விளக்குவித்து உயிர்க்குயிராய் நின்றும் உதவுதலால் உடனாகியும் நின்றருளுகின்றனன். ஆசானும் மாணவரும் கல்லூரிக் கலப்பிருப்பால் ஒன்றாகியும் பேரறிவும் சிற்றறிவுமாகக் காணப்பட்டு முறையே அறிவுறுத்தலும் அறிதலுமாய் நிற்றலால் வேறாகியும் ஓதுவிக்குங்கால் உடனோதி உயிர்க்குயிராய் நிற்றலால் உடனாகியும் நிற்கும் மெய்ம்மை மேலதற் கொப்பாகும்.
(1)
சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளைக் | கைவந் திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப் | பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்திதருந் | தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே. |
(பொ - ள்.) சைவ சமயமாம் சிவனெறியே சிறந்த நன்னெறியாகும். அந் நன்னெறியே அனைத்துச் சமயங்கட்கும் அப்பாற்பட்டதாகும்; அப்பாற்பட்டதாக நிற்கும் பழம் பொருளைச் செவ்விவாய்ந்த ஆருயிர்கள் கைவரப் பெற்று இன்புறும் பொருட்டுத் தில்லைத் திருச்சிற்றம்பலமாம் திருவருள் வெளியில் திருக்கூத்தியற்றும் அம்மை அம்பலவாணரின் செம்மையியல்பு காட்டுவதாகும். இம் மெய்க் கருத்தினை உளங்கொள்ளாமல் கை நழுவவிட்டு நிலைபேறில்லாமல் பிறந்து இறந்து உழலுவதற்கு ஏதுவாகிய சமயநெறிகளில் புகுந்து பொழுது
1. | 'எம்பிரான் போற்றி' 8. திருச்சதகம், 67. |