பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

493

     சிவனினைவுமாறா நங்கைமார் தம் கணவன்மாரைச் சிவனடியாராக. ஆக்குந்திருத்தொண்டில் நல்லாசானை யொத்துத் திகழ்கின்றனர். அவ்வுண்மை வருமாறு:

"மீனவன் செவியி னூடு மெய்யுணர் வளிப்போர் கூற
 ஞானசம் பந்தர் என்னும் நாமமந் திரமும் செல்ல
 ஆனபோ தயர்வு தன்னை அகன்றிட அமண ராகும்
 மான மில் லவரைப் பார்த்து மாற்றமொன் றுரைக்க லுற்றான்."
- 12. சம்பந்தர், 721.
"பதுமநற் றிருவின் மிக்கார் பரிகலந் திருத்திக் கொண்டு
 கதுமெனக் கணவ னாரைக் கண்ணுதற் கன்ப ரோடும்
 விதிமுறை தீபம் ஏந்தி மேவுமின் னடிசி லூட்ட
 அதுநுகர்ந் தின்ப மார்ந்தார் அருமறைக் கலய னார்தாம்."
- 12. குங்குலியக்கலயர், - 21.
     செம்பொருட்டுணிவினர் திருவருளால் கண்ட செந்தமிழ்த் தெய்வமாம் சிவபெருமானே பிறவா இறவாப் பெருந்தெய்வம். அதனால் அவனே விழுமிய முழுமுதல்வன். இவ் வுண்மை வருமாறு:

"சிவனொடொக் குந்தெய்வந் தேடினு மில்லை
 அவனொடொப் பாரிங்கு யாவரு மில்லை
 புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னும்
 தவனச் சடைமுடித் தாமரை யானே."
- 10.4.
"கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
 சுத்த சிவனெங்கும் தோய்வுற்று நிற்கின்றான்
 குற்றந் தெளியார் குணங்கொண்டு கோதாட்டார்
 பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே."
- 10. 1513.
தற்பொறி - தன்செல்வம்.

(1)
முருந்திள நகையார் பார முலைமுகந் தழுவிச் செவ்வாய்
விருந்தமிர் தெனவ ருந்தி வெறியாட்டுக் காளாய் நாளும்
இருந்தலோ காய தப்பேர் இனத்தனாய் இருந்த ஏழை
பொருந்தவுங் கதிமே லுண்டோ பூரணா னந்த வாழ்வே.
     (பொ - ள்.) சாயன்மிக்க மயிலிறகினடியை ஒத்த சிறிய பல் வரிசையையுடைய மாதரது பெரிய முலையின் குவட்டைத் தழுவி, அவர்தம் செவ்விய வாயிதழை (யாண்டுமில்லாத) புத்தமிழ்தமாக நுகர்ந்து காமக்களியாட்டுக்கு ஆளடிமையாகி நாளும் அறிவின்றியிருந்த உலகாயதன் என்னும் பேர் கொண்ட பொல்லாக் கூட்டத்தார்க்கு இனமாய்க் காலந் தள்ளிய அறிவிலியாகிய யான் இனியொரு கால் நன்னிலையடையவும் வழியுண்டோ? நீக்கமற நிறைந்த பேரின்பப் பெருவாழ்வே.

     (வி - ம்.) உலகாயதம் நால்வகைச் சமயங்களுள் புறப்புறச் சமயம் ஆறினிலொன்று. இவர்கட்கு "நிலம் நீர் நெருப்பு உயிரென்னும்" காற்று ஆகிய பூதங்களே உடன்பாடு. ஒரு கடவுளும், பல்லுயிரும்