பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

492

ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாள
நீக்குவை நீக்க மில்லா நினைப்பொடு மறப்பு மாற்றிப்
போக்கொடு வரவு மின்றிப் புனிதநல் லருளா னந்தந்
தாக்கவுஞ் செய்வா யன்றோ சச்சிதா னந்த வாழ்வே.
     (பொ - ள்.) உண்மை அறிவின்பப் பெருவாழ்வாம் முதல்வனே! நின்திருவருளாணையால் மாயாகாரியப் பொருள்களாம் உலகுடல் உண்பொருள் அனைத்தையும் ஆருயிர்களின் பொருட்டுப் படைத்தருள்வை; அப் படைக்கப்பட்ட பொருள்க ளனைத்தினையும் நொடிப் பொழுதினுள் துடைத்தும் அருள்வை; நீங்குதலில்லாத நினைப்பு மறப்புகளை மாற்றியும், போக்கொடு வரவெனப்படும் இறப்புப் பிறப்புகளை இயையாமல் நீக்கியும் உன்னுடைய திருவடித்தூய நல்ல பேரின்பப் பெருவாழ்வினை அருளியும் செய்யும் செல்வன் நீயல்லவா?

(1)
கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறோர்
இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வுந்
தற்பொறி யாக நல்குந் தலைவநின் னலதோர் தெய்வம்
பொற்புறக் கருதோங் கண்டாய் பூரணா னந்த வாழ்வே.
     (பொ - ள்.) தலையாய கற்பு மிகுந்த மாதராம் ஒருமைமகளிர் தம்மை மும்மை வாழ்க்கைக்கும் உறுதுணையெனக் கைப்பிடித்த காதற் கணவரை நாடுதலன்றி, அயல் வீட்டார், எவரையும் அந்நிலையில் வைத்து நாடுதல் செய்யார். (இதுவே நன்னெறி நல்லொழுக்கமாம். அதுபோல்) அடியேங்களும், இன்ப நல்வாழ்வினைத் தன் உரிமைச் செல்வமாகத் தந்தருளும் விழுமிய முழுமுதல்வனே நின்திருவடியன்றி வேறொரு தெய்வமுண்டெனக் கனவினும் கருதுதல் புரியோம். எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பேரின்பப் பெருவாழ்வே.

     (வி - ம்.) மெய்யுணர்வுக்குரவனாய்த் தோன்றியருள்பவன் ஒப்பில் ஒருவனேயன்றிப் பலராதல் யாண்டுமின்று. அதுபோல் கடவுளும் ஒருவனே; பலராதல் யாண்டு மின்று. இது செந்தமிழ்ப் பொதுமறை தந்தருளிய திருவள்ளுவநாயனாரும் "தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை" என்றருளினர். கொழுநனைத் தெய்வமாகத் தொழுதலென்பது சிவனடியாராகத் தொழுதல். இல்வாழ்க்கையின் குறிக்கோள் இருவரும் பொருவரும் சிவனுக்கு மீளாஆளாய் மெய்ப்பணி புரிதலேயாம். மும்மை வாழ்வு: இப்பிறப்பு வாழ்வு, வரும்பிறப்பு வாழ்வு, திருவடிப் பெருவாழ்வு என்பன. திருவடிப் பெருவாழ்வுக்குத் தகுதியாதல் சிவனினைவு எத்திறத்தானும் மாறா நல்லார் இணக்கம் எய்துதலேயாம்.