நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே | நின்னடியர் கூட்டத்திலே | நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான | ஞேயத்தி லேயுன்இருதாள் | மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ | வளமருவு தேவை அரசே | வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை | வளர்காத லிப்பெண்உமையே. |
(பொ - ள்.) எல்லா வளமும் பொருந்திய தேவைநகருக்கு அரசியே, வடபெருங்கல் லெனப்படும் இமயமலையரையனுக்கு இரு கண்மணியாகத் திருத்தோற்றம் காட்டியருளிய மலைவளர்காதலிப் பெண் உமையே, வன்மையாகிய இளமை வாய்ந்த மயக்கும் பெண்களின் வஞ்சகச் செயலிலும், வாயினின்று வரும் வெட்டுமொழியிலும் துவளும் சிறிய இடையிலும் அன்னம்போல் நடக்கும் நடையிலும், கயல்மீன் போன்ற கண்களின் கள்ளப் பார்வையிலும், இனிமை போற் சொல்லும் சொல்லிலும், இளம் பிறைபோன்ற நெற்றியிற் காணப்படும் கீற்றுவரையிலும், நெற்றிப் பொட்டிலும், அவர் அழகுற உடுத்தி உழலும் பட்டிலும், பூசப்படும் வெண்பொடியிலும், அவர் காலடியிலும், மேலிடத்துப் பருத்துக் காணப்படும் ஈர்க்கிடைபோகா இளமுலையிலும், அவர்நிற்கும் தனிநிலையிலும் அடியேனுடைய புல்லறி வினை மனம் போகும்போக்கிலே போகவிட்டு நீள உழன்றொழியாமல், நன்னெறியொழுக்கத்திலும், திருவருளாலுண்டாம் அளவிறந்த பொறுமையிலும், நின்னுடைய அடியார் திருக்கூட்டத்திலும் இறவாத இன்பத்திற்கு ஏதுவாகிய உறுதியான அன்பிலும், மாசற்ற மெய்யுணர்வினால் பெறப்படும் மெய்ப்பொருள் உண்மையிலும், உன்னுடைய இரண்டு திருவடிகள் மட்டிலும் அடியேன் நெஞ்சம் இடையறாது சென்று பொன்றாப் பயன் துய்க்க உன்னுடைய திருவருளையும் அருள்வாயோ? தெட்டு-வஞ்சகம். உலக வாழ்க்கையில் உறுதுணையுடையார் பொலம்வழிப் போகாது நலம்வழிப் போவதுபோல் இறைதுணை யுடையாரும் செல்வர். பொலம் - தீமை.
(2)
பூதமுத லாகவே நாதபரி யந்தமும் | பொய்யென் றெனைக்காட்டிஎன் | போதத்தின் நடுவாகி அடியீறும் இல்லாத | போகபூ ரணவெளிக்குள் | ஏதுமற நில்லென் றுபாயமா வைத்துநினை | எல்லாஞ்செய் வல்லசித்தாம் | இன்பவுரு வைத்தந்த அன்னையே நின்னையே | எளியேன் மறந்துய்வனோ |