பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

500

மிடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலமெனவும்
    மெய்யெலாம் உள்ளுடைந்து
  வீறிட்ட செல்வர்தந் தலைவாயில் வாசமாய்
    வேதனைக ளுறவேதனுந்
துடியிட்ட வெவ்வினையை ஏவினான் பாவிநான்
    தொடரிட்ட தொழில்க ளெல்லாந்
  துண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன
    தொண்டர்பணி செய்வதென்றோ
அடியிட்ட செந்தமிழின் அருமையிட் டாரூரில்
    அரிவையோர் பரவைவாயில்
  அம்மட்டும் அடியிட்டு நடைநடந் தருளடிகள்
    அடியீது முடியீதென
வடியிட்ட மறைபேசு பச்சிளங் கிள்ளையே
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
     (பொ - ள்.) (தொன்மையும் நன்மையும் இனிமையும், எளிமையும் அழிவில் தன்மையும் ஆரழகும் ஒருங்கமைந்த நினக்கினிய) பழைமையாகிய, செந்தமிழின் அழியாப் பெருமை சேர் அருமையைக் குறித்துத் திருவாரூரில், அரிவையாகிய ஒப்பற்ற பரவைநாய்ச்சியாரது தலைவாயில் வரைக்கும், திருவடிகளை வைத்து, நடைநடந்தருளிய இறைவரது அனைத்திற்கும் ஆதியாக நின்றருள்கின்ற திருவடி ஈது, அந்தமாக நின்றருள்கின்ற திருவடி ஈது என்று தெளிவித்து, மறைகளைப் பேசுகின்ற பச்சிளங்கிளியே, வளமைமிக்க தேவை நகர்க்கு அரசியே, மலையரையனுக்கு இருகண் மணியெனத் தோன்றியருளிய பெருகுபெண் மகளாம் உமையே!

     வறுமையாகிய உலக வாழ்க்கையினால் உள்ளுடைந் தழிதற்கு ஏதுவாகிய உப்பிட்ட மட்கலம் போலவும், உடம்பெங்கணும், உள்ளுடைந்து, மிகுந்த ஈயாச் செல்வர் வாயிலே உறைவிடமாய்க் கொண்டு துன்பங்களையடையப் படைப்போனாகிய நான்முகனும், நடுங்குதற்கு ஏதுவாகிய கொடிய வினைகளை (அடியேன் மேல்) ஏவிவிட்டனன். கொடியேனாகிய நான் தொடங்கின தொழில்கள் முழுவதும் துண்டிக்கப்பட்ட சாண்வயிற்றின் அளவாகவே முடிந்தது. (இதை விடுத்து) உன் மெய்யடியார் பணிகளைச் செய்வதெந்நாளிலோ?

     (வி - ம்.) மிடி - வறுமை. கலம் - மட்பாண்டம். வீறிட்ட - மிகுந்த. வாசம் - உறைவிடம். வேதனை - துன்பம். துடி - நடுக்கம். 'காதலி' பெண்மகள். 'காதலன்' ஆண்மகன், இவ்வுண்மை "நம்பாண்டார் நம்பி பெறுங்காதலி"1 எனவும் "காதலனும்; நனி நீடுவகையுறுகின்றார்"எனவும் வரும் திருப்பாட்டுகளானுணர்க.

(4)
 
 1. 
'ஏதமில் சீர்.' 12. சம்பந்தர் - 1161.  
 2. 
'இனிய மழலைக்.' சிறுத்தொண்டர், 63.