பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

501

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
    புராந்தகி த்ரியம்பகிஎழில்
  புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
    புஷ்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
    நாதாந்த சத்திஎன்றுன்
  நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே
    நானுச்ச ரிக்கவசமோ
ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ
    அகிலாண்ட கோடிஈன்ற
  அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
    ஆனந்த ரூபமயிலே
வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
     (பொ - ள்.) திருவாத்திமாலையினை மெய்யுணர்வின் திருவடையாளமாகச் சூடியருளும் சிவபெருமான், மறைமுதல்வி என்று வாயாரப் புகழ அண்டகோடிகள் அனைத்தையும் பெறாது பெற்றெடுத்துப் பேணும் அருட்டாயே! பின்னும் கன்னியென மாமறைகளால் புகழ்ந்து பேசப்படுகின்ற பேரின்பவண்ணமான மயில்போல்வாளே, கச்சை அணிசெய்யப்படும் இரண்டு முலைகளுமுடைய மாதர்கள் மகிழும்படியான வான்புனலாம் கங்கையினால் புகழப்பெற்ற வளமிக்க தேவையம் பதிக்கு அரசியே, மலையரையனுக்கு இருகண்மணியொத்துத் தோன்றியருளிய மலைவளர் காதலிப் பெண்உமையே!

     எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் இறைவியே, பழையோளே, அழியா மங்கல மணாட்டியே, முதல்வியே, முப்புரமெரித்த முனைவளே, மூன்று திருக்கண்களையுடையவளே, அழகிய தெய்வப்பெண்ணமுதே, விளங்குகின்ற இன்பருள் வடிவே, (ஆறு நிலைகளையுங் கடந்து உச்சியின்கண் காணப்படும்) ஆயிரவிதழ்த் தாமரையில் வீற்றிருந்தருளும் நாரணியே, மனத்துக் கெட்டாத நாயகியே, முக்குணங்கடந்த முறைமையளே, ஓசைமெய்யாம் நாததத்துவங்கடந்த அறிவாற்றலன்னையே என்று உன்திருப்பெயர்களை உள்ளன்புடன் உள்கி ஓவாது ஓதும் மெய்ம்மைச் சிவனடியார்தம் திருப்பெயராம் திருமந்திரங்களையே அடியேன் நின்திருவருளால் ஓதியுய்யும் வாய்ப்புண்டாமோ?

     (வி - ம்.) சிவபெருமான் செயல்களும் அம்மை செயலாக ஓதப்படுவது வேற்றுமையின்மை விளக்குதற்கேயாம். அம்மைக்குரிய 'நாராயணி' என்னும் பெயர் அப்பனுக்குரிய நாராயணன் என்னும்