பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

502

திருப்பெயரின் பெண்பாற் பெயரேயாம். நாராயணனென்னும் திருப்பெயர் சிவபெருமானுக்கேயுரிய தென்னும் மெய்ம்மையினை மாதவச் சிவஞானமுனிவர் தனித் தமிழ்ச் சிவஞானபோதப் பேருரையின்கண் தடைவிடைகளான் விளக்கியருளியதாற் காண்க.

(5)
பாகமோ பெறஉனைப் பாடஅறி யேன்மல
    பரிபாகம் வரவும்மனதில்
  பண்புமோ சற்றுமிலை நியமமோ செய்திடப்
    பாவியேன் பாபரூப
தேகமோ திடமில்லை ஞானமோ கனவிலுஞ்
    சிந்தியேன் பேரின்பமோ
  சேரஎன் றாற்கள்ள மனதுமோ மெத்தவுஞ்
    சிந்திக்கு தென்செய்குவேன்
மோகமோ மதமோ குரோதமோ லோபமோ
    முற்றுமாற் சரியமோதான்
  முறியிட் டெனைக்கொள்ளும் நிதியமோ தேடஎனின்
    மூசுவரி வண்டுபோல
மாகமோ டவும்வல்லன் எனையாள வல்லையோ
    வளமருவு தேவைஅரசே
  வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
    வளர்காத லிப்பெண்உமையே.
     (பொ - ள்.) நின்திருவடியினை நயமுறப் பாடவும் அறிந்திலேன். மலபரிபாகமாம் செவ்வி உண்டாதற்கு அடியேன் மனத்தின்கண் நற்பண்பு ஒரு சிறிதும் இல்லை; கடமைகளைச் சரிவரச் செய்யக் கொடியேனுடைய பாவவடிவான இவ்வுடம்போ தக்க வலுவுடையதாக வில்லை; திருவடியுணர்வாம் மூதறிவினைக் கனவிலுங் கருதும் கருத்தில்லேன்; நீக்கமறத் தாடலைபோற் புணரும் பேரின்பஞ் சேர்தற்கு எளியேனின் கள்ளமனம் மிகவும் சூழ்ந்து நோக்குகின்றது; யான் என் செய்குவேன்; மயக்கமும் மதமும் வெகுளியும் கடும்பற்றுள்ளமும், உட்பகையும் (காமமும்) ஆகிய இந்நீங்காக்குற்றங்கள் ஆறும் எளியேனை முறியோலை எழுதி அடிமையாக்கித் தம் வயப்படுத்திக் கொள்கின்றன. முறியோலை - ஆவண ஓலை.

     அழிந்து பட்டுப்போகும் பொருட்செல்வந்தேட வென்றாலோ, மலர்களில் தேனையுண்ணும் பொருட்டு மணம் நோக்கிச் சூழ்ந்து மொய்க்கும் வண்டுகளைப்போன்று மிக்கவேட்கையுடன் நிலத்தேயன்றி வானத்தின் மேலும் பறந்து ஓடவும் வல்லனாயிருக்கின்றேன்; இந் நிலையிலுள்ள எளியேனை ஆண்டருள வல்லையோ? வளம் பொருந்திய தேவையம்பதிக்கு அரசியே, மலையரையனுக்கு இருகண்மணியெனத் தோன்றியருளிய வளர்காதலிப் பெண் உமையே!