என்னைநான் கொடுக்கஒருப் பட்ட காலம் | யாதிருந்தென் எதுபோய்என் என்னை நீங்கா | அன்னைபோல் அருள்பொழியுங் கருணை வாரி | ஆனந்தப் பெருமுகிலே அரசே சொல்லாய். |
(பொ - ள்.) (ஆருயிராகிய) என்னையே உன்திருவடிக்கு ஒப்புவிக்க யான் உடம்பட்டபொழுது (உலகியற்பொருள்கள்) எது எனக் கிருப்பினும் அதனால் வரும் பயன் யாது? எப்பொருள்கள் என்னை விட்டு நீங்கினும் அவற்றாலுண்டாம் பயன் இழப்பு யாது? (ஒன்றுமின்றாம்) அடியேனை விட்டு நீங்காத நற்றாய் போன்று திருவருள் பொழியும் கருணைப் பெருங்கடலே, பேரின்பப் பெருமுகிலே, காத்தருள் வேந்தே திருவாய் மலர்ந்தருள்வாயாக.
(2)
அரசேநின் திருக்கருணை அல்லா தொன்றை | அறியாத சிறியேன்நான் அதனால் முத்திக் | கரைசேரும் படிக்குனருட் புணையைக் கூட்டுங் | கைப்பிடியே கடைப்பிடியாக் கருத்துட் கண்டேன். |
(பொ - ள்.) அருளரசே, உன்னுடைய பெருந்தண்ணளியாம் திருக்கருணையை அல்லாமல் வேறொன்றையும் கனவிலும் கருதியறியாத சிறியனானேன்; அதனால் திருவடிப் பெருங்கரை சேரும்படி உன் திருவருட்புணையைப் பிடிக்க அதனைச் சேர்த்தருள்வையானால், அதுவே உன்கைப்பிடியெனக் கடைப்பிடித்துய்யக் கருத்துட்கண்டு கொண்டேன்.
(3)
கண்டேனிங் கென்னையும்என் றனையும் நீங்காக் | கருணையும்நின் றன்னையும்நான் கண்டேன் கண்டேன் | விண்டேன் என் றெனைப்புறம்பாத் தள்ள வேண்டாம் | விண்டதுநின் அருட்களிப்பின் வியப்பா லன்றோ. |
(பொ - ள்.) நின் திருவருளால் இங்கு அடிமையாம் என்மெய்த் தன்மையினையும், எளியேனை விட்டு யாண்டும் நீங்காது உடனாக நின்றருளும் நின்னையும் ஏழையேன் கண்டுகொண்டேன்;1 திருவருட் காட்சி, நுகரும் நுண்பொருளே யன்றிப் பகரும் பருப் பொருளன்மையால் அதனை வெளிப்பட விளம்புதல் முறையன்று, அம் முறையினைக் கடந்து அடியேன் விளம்பினேன் என்று எளியேனைப் புறம்பாகத் தள்ளியருள வேண்டா; ("ஆர் பெறுவார் அச்சோவே" என்பது போன்று) நின்திருவருட்களிப்பின் வியப்பினால் விளம்பியதேயாம். விண்டல் - விளம்பல். காட்டுங்கருவியாம் ஒளி வரையறைக்குட்பட்டதாயின் அதனுடன் கலந்த கண்ணொளியும் வரையறைக்குட்பட்ட பொருள்களையே காணும். வரையிகந்த நிறைவாயின் எங்குமாய்க் காணும்.
(4)
1. | 'மேவியபுன்' (ஞான நாட்டம்) 11. பட்டினத். திருவிடை - 13 |