(பொ - ள்) திருவடிப் பேற்றினுக்கு வாயிலாகிய மவுனமென்று சொல்லப்பட்டுக் கரும்பின்வழித் துளித்துவழியும் மிகுந்த தேனை வாய் மடுத்து இனிக்கும்படி யுண்டுள்ளேன். வித்து : காரணம், வாயில், ஏது, அடிப்படை, ஆதாரம்.
(385)
நித்திரையும் பாழ்த்த நினைவும்அற்று நிற்பதுவோ | சுத்த அருள்நிலைநீ சொல்லாய் பராபரமே. |
(பொ - ள்) உறக்கமும், உலகியல் முகமாகச் செல்லும் பாழான நினைவும் நீங்கி நிற்பது தானோ? தூய அருள் நிலை? தேவரீர் திருவாய் மலர்ந்தருள்வாயாக.
(386)
மண்ணும் மறிகடலும் மற்றுளவும் எல்லாம்உன் | கண்ணில் இருக்கவும்நான் கண்டேன் பராபரமே. |
(பொ - ள்) நிலவுலகமும், இதனைச் சூழ்ந்த பெருங்கடலும், மற்றுள்ளனவும் தேவரீருடைய திருநோக்கத் திருக்குறிப்பால் இயங்கிவரும் மெய்ம்மையினை அடியேன் திருவருளால் கண்டுணர்ந்தேன்.
(387)
பூட்டிவைத்து வஞ்சப் பொறிவழியே என்றனைநீ | ஆட்டுகின்ற தேதோ அறியேன் பராபரமே. |
(பொ - ள்) மாயா காரியத் தத்துவம் எனப்படும் மெய்களுடன் அடியேனை இணைத்து வைத்து வஞ்சித்துத் தன் வழி ஈர்த்துச் சென்று புன்னெறிக்கு உய்க்கும் ஐம்பொறிகளின் வழியே அடியேன் செல்லுமாறு எளியேனை ஆட்டி வைக்கும் பொருள் யாது? அதனை ஏழையேன் அறிய வல்லமையுள்ளவ னல்லேன். (காரணம் வினை என்ப).
(வி - ம்.) வழி நடப்பார்க்குத் துணைக்காற்றும் எதிர்காற்றும் முறையே வாய்ப்பும் வருத்தமும் தருவனவாகும். ஆனால், அவை வழி நடக்கும் ஊக்கத்தை நீக்குவனவல்ல. வழி நடப்போர் வாய்ப்பால் மகிழ்வும், வருத்தத்தால் சோர்வும், கொள்ளாது நடப்பரேல் அவர்க்கு நடைத்துன்பம் நலியாதாகும். அதுபோல் உயிர்க்கிழவரும் வினையான் வரும் இன்பத் துன்பங்களைச் சிறிதும் எண்ணாது திருவடி நாட்டத்தால் ஒழுகுவரேல் ஐம்பொறிகளும் அவர் வழிச் சென்று நன்மைக்குத் துணை நிற்கும்.
(388)
பொய்யுணர்வா யிந்தப் புழுக்கூட்டைக் காத்திருந்தேன் | உய்யும் வகையும் உளதோ பராபரமே. |
(பொ - ள்) நிலையாதவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாய் எண்ணிலாப் புழுக்கள் நிறைந்த இவ்வுடம்பை மெய்யெனக் கருதிக் காத்திருந்தேன் வீணாக; அடியேனுக்கு இனிப் பிழைக்கும் வழியுண்டோ?