காதற்றுன்பம் அனைத்தும் நீ வெளிப்படையாகக் கூறுவாயானால் அவர் அதனை மெய்யெனக் கொள்வர். திறவா - வெளிப்படையாக.
(49)
வாட்டப் படாத மவுனஇன்பங் கையாலே | காட்டிக் கொடுத்தானைக் காண்பேனோ பைங்கிளியே. |
(பொ - ள்) உலகியல் நுகர்வுகளில் ஈடுபட்டுத் துன்புறா வண்ணம் அடியேனுக்கு அறிவடையாளக்கை எனப்படும் சின்முத்திரை காட்டியருளி அதன் வாயிலாக மௌன இன்பம் காட்டிக் கொடுத்தவனை இன்னுமொரு முறை எளியேன் காண்பேனோ?
(50)
வாரா வரவாக வந்தருளும் மோனருக்கென் | பேராசை எல்லாம்போய்ப் பேசிவா பைங்கிளியே. |
(பொ - ள்) அடியேனது செவ்வி நோக்கி வருதற்கரிய விருந்தாக வந்தருளிய மவுன குருவின்பால் அடியேன் கொண்டுள்ள பெருவேட்கை யினை முற்றும் நீ போய்ப் பேசி வருவாயாக. வாராவரவு - வருதற்கரிய விருந்து.
(51)
விண்ணவர்தம் பாலமுதம் வேப்பங்கா யாகஎன்பால் | பண்ணியதெம் அண்ணல்மயம் பார்த்தாயோ பைங்கிளியே. |
(பொ - ள்) தேவரிடத்துள்ள அமிழ்தமும் வேப்பங்காய் போன்று கைக்குமாறு எனக்குச் செய்தது எளியேன் என் தலைவர் பால் வைத்துள்ள பெருவேட்கை.1 பைங்கிளியே இதனை நீ பார்த்தாயோ?
(52)
விண்ணுள் வளியடங்கி வேறற்ற தென்னஅருள் | கண்ணுள் அடங்கிடவுங் காண்பேனோ பைங்கிளியே. |
(பொ - ள்) விண்ணாகிய ஆகாயத்தின் பெரு நிறைவினுள்ளே வளியாகிக் காற்று வேறற அடங்கி நிற்பது போன்று அடியேனும் திருவருட் பெருநிறைவினுள் அடங்கி நிற்குமாறு திருவருளால் காண்பேனோ? பெருநிறைவு - வியாபகம். அடங்குநிறைவு - வியாப்பியம்.
(53)
விண்ணார் நிலவுதவழ் மேடையிலெல் லாருமுற | மண்ணான வீட்டிலென்னை வைத்ததென்னோ பைங்கிளியே. |
(பொ - ள்) வானம் அளாவிய நிலவு தவழ்கின்ற மேல்நிலா முற்றமாகிய திங்கள்மண்டிலத்தின்கண் திருவருளால் சிவனடியார்களனைவரும் அமிழ்தவெள்ளம் நுகர்ந்துகொண்டிருக்க, அடியேன் மட்டும் இப் பூமியின்கண் இருக்குமாறு வைத்தருளியது என்ன முறையோ?
(54)
1. | 'வேம்பின்'. குறுந்தொகை, 196. |