பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

658
உணர்ந்து மெய்ப்புணர்ப்புற்று நிறைந்து நிற்கும்நாள் எந்நாளோ?

(7)
 
முச்சகமே யாதி முழுதுமகண் டாகார
சச்சிதா னந்தசிவந் தானென்ப தெந்நாளோ.
     (பொ - ள்) துறக்கவுலகம், நிலவுலகம். கீழுலகம் என்று சொல்லப்படும் மூன்று முதலாகச் சொல்லப்படும் உலகமனைத்தும் வரையறையில்லாத பெருவடிவாய் நின்றருள்வது உண்மை அறிவு இன்ப உருவாம் சிவமே என்றிருப்பது எந்நாளோ?

(8)
 
எவ்வடிவும் பூரணமாம் எந்தையுரு வென்றிசைந்த
அவ்வடிவுக் குள்ளே அடங்குநாள் எந்நாளோ.
     (பொ - ள்) எல்லாவடிவங்களும் முழு நிறைவாய் எந்தையாகிய சிவபெருமானின் திருவுருவே என்றிசைந்து அவ்வுருவினுக்குள்ளே அடியேன் அடங்குநாள் எந்நாளோ?

(9)
 
சிந்தித்த தெல்லாஞ் சிவபூ ரணமாக
வந்தித்து வாழ்த்தி வணங்குநாள் எந்நாளோ.
     (பொ - ள்) திருவருளால் அடியேன் நினைத்த தெல்லாம் சிவநினைவாகக் காதலித்து நினைந்தும், கசிந்து வாழ்த்தியும், கைகூப்பி வணங்கியும் வழிபடுநாள் எந்நாளோ?

(10)
 
தாங்கியபார் விண்ணாதி தானேஞா னாக்கினியாய்
ஓங்குமி யோகவுணர் வுற்றிடுநாள் எந்நாளோ.
     (பொ - ள்) புறத்துக் குண்டலிசத்தி எனப்படும் ஆதிசேடனால் தாங்கப்படும் இந்நிலவுலகமும், வானுலகமும், ஏனைய உலகங்களும் சிவயோக முதிர்ச்சியினால் தனக்குத் தானாகவே ஞானச் சுடர்விளக்காகக் காணும்நாள் எந்நாளோ?

(11)
 
ஆசனமூர்த் தங்க ளறஅகண்டா காரசிவ
பூசைசெய ஆசை பொருந்துநாள் எந்நாளோ.
     (பொ - ள்) ஒன்பது வகையான இருக்கை யெனப்படும் ஆசனங்களும், இருபத்தைந்து வகையான சிவத்திருக் கோலங்களும் தோற்ற முறாது எங்கணும் ஒரே சிவவடிவாய்த் தோற்றமுற்று அகண்டாகார சிவபூசையினை அடியேன் பொருந்துநாள் எந்நாளோ?

     (வி - ம்.) சிவனை உலகப் பெருவடிவாகக் கண்டு வழிபடும் பெற்றி ஒருவருக்கு அவரை யறியாமலே திருவருளால் அமைதல் வேண்டும். முன்செய்துவந்த சிவ வழிபாடுகளும் அதுபோல் அவரையறியாமல் நழுவவேண்டும். அதற்கொப்பு உறங்குகின்றவன் கையில் வைத்திருந்த பாக்கு அவனை யறியாமலே நழுவி விழுவதாகும்.

(12)
 
அஞ்செழுத்தின் உண்மை அதுவான அப்பொருளை
நெஞ்சமுத்தி ஒன்றாகி நிற்குநாள் எந்நாளோ.