பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


674


     (பொ - ள்) எளியேனை அடிமையாகவுடையவனே, பள்ளத்தாக்குகளிலெல்லாம் தானாகவே பரந்து பாயும் புனல்போன்று உலகப் பொருள்களில் அடியேன் உள்ளம் செல்லுமானால் நின்திருவருளுதவியின்றி எளியேன் என் செய்குவேன்?

(10)
முன்னினைக்கப் பின்மறைக்கும் மூடஇருள் ஆகெடுவேன்
என்னினைக்க என்மறக்க எந்தை பெருமானே.
     (பொ - ள்) எந்தை பெருமானே! அடியேன் ஒரு நல்ல செய்தியை முன் நினைத்தால், அறிவை மறைப்பதாகிய மூட ஆணவவல்லிருள் உடனே மறைக்கின்றது. ஆதலின் எளியேன் எக் காரியத்தை நினைப்பேன்? எக் காரியத்தை மறப்பேன்?

(11)
வல்லாளா மோனாநின் வான்கருணை என்னிடத்தே
இல்லாதே போனால்நான் எவ்வண்ணம் உய்வேனே.
     (பொ - ள்) எல்லா வல்லமையும் உள்ளவனே, மவுனநிலையுடையவனே, உன்னுடைய மேலான பெரிய தண்ணளி எனப்படுங் கருணை எளியேன்பால் இல்லாமற் போனால் அடியேன் எவ்வாறு உய்வேன்?

(12)
வாக்கும் மனமும் மவுனமுற எந்தைநின்னை
நோக்கும் மவுனமிந்த நூலறிவில் உண்டாமோ.
     (பொ - ள்) உலகப் பேச்சடங்கிய வாயும், நினைப்படங்கிய உள்ளமும் பொருந்தினால் அல்லாமல், எந்தையே நின்னையே நோக்கி நிற்கின்ற மவுனநிலை இவ்வுலகியல் நூல்களைக் கற்கும் அறிவினால் உண்டாகுமோ?

(13)
ஒன்றாய்ப் பலவாய் உலகமெங்குந் தானேயாய்
நின்றாய் ஐயாஎனைநீ நீங்கற் கெளிதாமோ.
     (பொ - ள்) ஐயனே! நீ அறிவு நிலையில் ஒன்றாகியும், ஆருயிர்கள் பலவற்றோடும் கலந்து உடனாய் நிற்கும் ஆற்றல் நிலையில் பலவாயும் அன்பு நிலையில் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பவனாகியும் உள்ளாய். எளியேனை நீ நீங்கற்கு எளிதாகுமோ?

(14)
ஆவித் துணையே அருமருந்தே என்றனைநீ
கூவிஅழைத் தின்பங் கொடுத்தாற் குறைவாமோ.
     (பொ - ள்) எளியேனின் ஆருயிர்த்துணைவனே! சாவாமருந்தே, அடியேனை நீ நின்திருவருளால் கூவி அழைத்து உன் திருவடிப் பேரின்பினைக் கொடுத்தருளினால் உனக்கு ஏதுங் குறைவுண்டாமோ?

(15)
எத்தனையோ நின்விளையாட் டெந்தாய்கேள் இவ்வளவென்
றத்தனையும் என்னால் அறியுந் தரமாமோ