தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

xxxi

     இவ்வாறிருக்கையில், தந்தையர் கேடிலியப்பர் இறைவன் திருவடி நீழல் எய்தினர். எய்தவே, பிள்ளைப்பருவங் கடந்திருந்த தாயுமானார் தந்தையார் பணியை மேற்கொண்டு நடத்திவர வேண்டியவரானார். கடமையை வழுவின்றி நடத்தி வந்தாராயினும் இவர் தம் உள்ளம் ஆண்டவன் திருவருளிலேயே ஊன்றியிருந்தது. நல்லாற்றுப்படுத்தும் ஒரு ஞான குரவனைக் கண்டு அருள்பெறும் நாள் எந்நாளோ என்றே இவர் ஏங்கியிருந்தார். இந்நிலையில், எல்லாம்வல்ல இறைவன் திருவருள் முன்னின்று கூட்ட, திருமூலர் மரபில் வந்த மௌனகுரு தேசிகரை ஒருநாள் இவர் காண நேர்ந்தது. காண்டலும் உள்ளம் உருகி விழிநீர் வார, தேசிகர்தம் திருவடிகளில் வீழ்ந்து பற்றி அவரருளால் மெய்யறிவு தலைக்கூடப்பெற்றார். இவ்வுண்மை இவர் பாடியுள்ள மௌனகுரு வணக்கம் என்னுந் திருப்பதிகத்திற் காணலாம்.

     இங்ஙனமாக யோகநிலை அடைந்த அடிகட்கு அரசனும் ஆவன புரிந்து வந்தான். பின்னர்ச் சில நாட்களில், அவ்வரசன் விண்ணுலகடைந்தனன். அடிகளும், அரசியாருக்குச் செம்மை அறிவு கொளுத்தித் தம் மாணவர் அருளையருடன் இராமநாதபுர மடைந்தனர்.

     அடிகள் அவண் அண்மி யிருப்பதை யறிந்த தமையனார் சிவசிதம்பரம் பிள்ளை ஆண்டுப் போந்து இல்லறம் மேற்கொண்டொழுகுமாறு வற்புறுத்தினர். திருவருட்குறிப்பினாலும் ஆசான் திருவாணையாலும் தொல்லறமாய இல்லறமே நல்லறமென்றுட்கொண்டு, அடிகள் திருமறைக்காடு போந்து, மட்டுவார் குழலி எனும் கற்புக்கரசியைக் கடிமணம் புரிந்தனர். கனக சபாபதி எனும் ஓர் ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். பின்னர்ச் சின்னாட்களில் இவர்தம் வாழ்க்கைத் துணைவியார் இறைவன் திருவடி நீழலை அடைந்தார். அடையவே, அடிகளார் துறவறம் மேற்கொண்டார்.

     தாயுமான அடிகள் துறவடைந்தபின், திருச்சிராப்பள்ளி மௌனகுரு மடத்தை அடைந்து கி. பி. 1644 ஆம் ஆண்டிலிருந்து அம் மடத்திற்குத் தலைவராயிருந்து பல பதிகளுக்குச் சென்று இறைவனை வணங்கி வாயார வாழ்த்திவந்தனர்; பின்னர் மௌன குருவின் திருவருளால் ஞானகிட்டை கூடப்பெற்று, கி. பி. 1662 தைத்திங்கள் 28 விசாகத்தன்று மாலை, இராமநாத புரத்திற்கேகி இறைவனோ டிரண்டறக் கலந்து, மெய்ப்புணர்ப்பு வீடுபேறாம் அத்துவித முத்தி பெற்றனர் என்ப. சமாதியான இடத்தில் திருக்கோயிலொன்றும் அதன்கண் அடிகள் திருவடிப் பேறடைந்த நன்னாளைக் குறிக்குங் கல்வெட்டொன்றும் உள்ளன.