பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


122


துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்கர்ம
    துட்டதே வதைகளில்லை
  துரியநிறை சாந்ததே வதையாம் உனக்கே
    தொழும்பன்அன் பபிடேகநீர்
உள்ளுறையி லென்னாவி நைவேத்தி யம்ப்ராணன்
    ஓங்குமதி தூபதீபம்
  ஒருகால மன்றிது சதாகால பூசையா
    ஒப்புவித் தேன்கருணைகூர்
தெள்ளிமறை வடியிட்ட அமுதப் பிழம்பே
    தெளிந்ததே னேசீனியே
  திவ்யரச மியாவுந் திரண்டொழுகு பாகே
    தெவிட்டாத ஆனந்தமே
கள்ளன்அறி வூடுமே மெள்ளமௌ வெளியாய்க்
    கலக்கவரு நல்லஉறவே
  கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
    கருணா கரக்கடவுளே.
     (பொ - ள்) "துள்ளுமறி . . . அபிடேகநீர்" - (ஓயாது ஒன்றுவிட்டு ஒன்றுபற்றி உழலும் இயல்பு வாய்ந்த) மனமென்று சொல்லப்படும் துடிதுடிக்கும் மடமை பொருந்திய ஒன்றை நினக்கு ஒப்புவிப்பதாகிய பலியாக நல்கினேன்; (அதனால்) இருவினைகள் என்று சொல்லப்படும் துன்பத்தை விளைக்கின்ற கொடிய ஆவிகள் இல்லை. அருள்நிலை என்று சொல்லப்படும் நான்காம் நிலையாகிய துரிய மேலாம்வெளியில் விளங்குகின்ற அமைதி வடிவான தெய்வமே உன் திருவடிக்கு (மீளா ஆளாகித் தொண்டு பூண்டொழுகும்) அடியேன் அன்பே திருமுழுக்குத் திருத்த நீராகும்;

     "உள்ளுறையி . . . சீனியே" - அடிகள் அடியேன் உள்ளத்துள் உறைந்தருள்வீரானால், அடியேன் ஆருயிர், நினக்குக் குழைவிக்கும் திருவமுதாகும்; அடியேன் உயிர்ப்பு நறுமணங் கமழ்கின்ற உறுபுகையாகும்; அடியேன் அறிவு சுடர் ஒளியாகும்; (இத்தகைய வழிபாடு குறித்த) ஒருபொழுதுமட்டுமன்று. இடையறாது எப்பொழுதும் இயற்றும் தப்பில் வழிபாடாக நின் திருவடிக்கு ஒப்புவித்தேன். அந்தண்மை மிகுகின்ற தெளிவுடைத்தாயுள்ள செந்தமிழ்த் திருமாமறையானது பிழிந்தெடுத்துச் சாரமாய்த் தெரித்துக் காட்டிய மிக்க இனிப்பான சீனி போன்ற சீர்மையனே;

    "திவ்யரச . . . நல்லவுறவே" - தெய்வத்தன்மைபொருந்திய இனிய சுவைகளனைத்தும், ஒருசேரக் கூடி ஒழுகாநின்ற ஒப்பில் பாகே, வெறுப்புக்கொள்ளுத லில்லாத விழுப்பேரின்பமே (மெய்ந்நெறிக்குப் புறம்பான) பொய்ந்நெறி ஒழுகும் கள்ளனாகிய அடியேன் அறிவிடத்தும்,