பிறருக்குரைத்துத் தானடங்காப் பேதையரைச் செந்தமிழ்ச் சீரிய பொதுமறை கூறுவது காண்க:
| "ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப் |
| பேதையிற் பேதையார் இல்" |
| - திருக்குறள் 834 |
மனம் அடங்காதார் தனக்குவமையில்லாதான் தாள் சேராதாராவர். அவர்கள் இறப்புவருமோ என்று எண்ணித் துன்புறுவர். இவ்வுண்மை வரும் செந்தமிழ்த்திருமாமறைகளா னுணர்க:
| "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
| மனக்கவலை மாற்ற லரிது" |
| - திருக்குறள், 7. |
| "ஓம்பினேன் கூட்டைவாளா உள்ளத்தோர் கொடுமைவைத்துக் |
| காம்பிலா மூழைபோலக் கருதிற்றே முகக்கமாட்டேன் |
| பாம்பின்வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின்றேனை |
| ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூ ருடையகோவே" |
| 4 - 46 - 1. |
| "மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே |
| நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் |
| கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே |
| காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே." |
| - 5 - 84 - 2. |
| "காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் |
| பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் |
| தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் |
| கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே." |
| - 10 - 211. |
திருவடியின்பம் அளவிடப்படாத தென்பதும் அழியாப் பேரின்பப் பெருந்தேன் என்பதும் வரும் செந்தமிழ்த்திருமாமறை முடிபுகளான் உணர்க:
| "அறவே பெற்றார் நின்னன்பர் அந்த மின்றி யகநெகவும் |
| புறமே கிடந்து புலைநாயேன் புலம்பு கின்றேன் உடையானே |
| பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாப் பிரிவில்லா |
| மறவா நினையா அளவிலா மாளா இன்ப மாகடலே." |
| - 8. பிரார்த்தனைப்பத்து, 6. |
| "தினைத்தனை யுள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே |
| நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் |
| அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும் |
| குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ." |
| -8. திருக்கோத்தும்பி, 3. |
(1)