தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன | செயற்கொண் டிருப்பனமுதல் | தேகங்க ளத்தனையும் மோகங்கொள் பௌதிகஞ் | சென்மித்த ஆங்கிறக்கும் | விரிவாய பூதங்கள் ஒன்றோடொன் றாயழியும் | மேற்கொண்ட சேடம்அதுவே | வெறுவெளி நிராலம்ப நிறைசூன்யம் உபசாந்த | வேதவே தாந்தஞானம் | பிரியாத பேரொளி பிறக்கின்ற வருள்அருட் | பெற்றோர்கள் பெற்றபெருமை | பிறவாமை யென்றைக்கும் இறவாமை யாய்வந்து | பேசாமை யாகுமெனவே | பரிவா யெனக்குநீ யறிவிக்க வந்ததே | பரிபாக காலமலவோ | பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற | பரிபூர ணானந்தமே. |
(பொ - ள்.) தெரிவாக . . . . . . ஆங்கிறக்கும் - அறிவுடனே கூடித் தவழ்வனவும், நடப்பனவும், பறப்பனவும், தொழின்மேற்கொண்டு இருப்பனவும் முதலாகிய மாயா காரிய உடம்புகளனைத்தும், மயக்கத்தினை மேன்மேற்கொள்விக்கும் பூதத் தொடர்பாகிய பௌதிகம் எனப்பட்டு (முதல்வன் ஆணையினால்) தோற்றமுற்றுப் பிறந்தனபோன்று மாற்றமாகிய ஒடுக்கமுற்று இறக்கும்.
விரிவாய . . . . . . ஞானம் - பரப்பாயுள்ள ஐம்பெரும் பூதங்கள் (தோன்றியவாறே அவ்வவற்றின் தன்மாத்திரைகளினிடமாக) ஒன்றினொன்றா யொடுங்குவதாகிய அடக்கத்தினை எய்தும். இவற்றிற்கெல்லாம் மேற்பட்டிருக்கிற என்றும் பொன்றாது ஒன்றுபோல் நின்று நிலவும் எஞ்சியுள்ள மெய்ப்பொருளே, அறிவுப் பெருவெளியெனவும், பற்றுக்கோடில்லதெனவும், பெரும்பாழெனவும், வேண்டுதல் வேண்டாமை யில்லதாகிய உபசாந்தத்தினை விளைவிக்கின்ற பண்டை நான் மறைகளினாலும், அவற்றின் முடிபுகளினாலும் சொல்லப்படும் மூதறிவாகிய சிவஞான மெனவும்,
பிரியாத . . . எனவே - யாண்டும் நீங்காத பேரொளிப் பிழம்பில் தோன்றுகின்ற திருவருள் எனவும், அத் திருவருளினை அடைந்தோர்கள் எய்திய அரிய பெருமை எனவும், எந்நாளிலும் பிறவாமையும், இறவாமையும் ஆகிவந்து, வாய்வாளாமை எனப்படும் மோனநிலை ஆகுமெனவும்,