பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

15

     பரிவா . . . ஆனந்தமே - அடியேனுக்கு அறிவுறுத்தற்பொருட்டு, எம்பெருமானே! நீர் பெருந்தண்ணளியுடன் எழுந்தருளி வந்ததற்குச் சிறந்த காரணம் அடியேனுடைய செவ்வியாகிய பரிபக்குவ காலமல்லவோ. (பார்க்குமிட . . . பரிபூரணானந்தமே - என்னும் தொடருக்கு முதற்றிருப்பாட்டிற் கூறிய வுரையினையே இங்கும், மேல்வருவனவற்றிற்கும் கூறிக் கொள்க.)

     (வி - ம்) தேகங்கள் - யாக்கைகள்; உடம்புகள். மோகம் - மயக்கம். பௌதிகம் - பூதத்தொடர்பாயுள்ளது. சென்மித்த - பிறந்த. சேடம் - எஞ்சியது. நிராலம்பம்-பற்றுக்கோடில்லாதது. நிறைசூன்யம்-பெரும்பாழ். உபசாந்தம் - வேண்டுதல் வேண்டாமை யென்னும் விருப்பு வெறுப்பின்மை. பரிபாகம் - செவ்வி.

     'ஊர்வன' முதலியவற்றை யுணர்த்தும் திருப்பாட்டு வருமாறு:

"தோற்றியிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
    துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கின்
 ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்றும்
    ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றோ டுலவா
 மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி
    மன்னியிடும் பப்பத்து மானிடர்ஒன் பதின்மர்
 ஏற்றியொரு தொகைஅதனில் இயம்புவர்கள் யோனி
    எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே."
- சிவப்பிரகாசம், 47.
யோனி - பிறப்பு.

     உடல்கள் மோகங்கொள்ளச் செய்து மயக்குவனவாம். அங்ஙனம் மாயை மயக்குவது அதன் இயல்பானன்று; ஆணவமலச் சார்பானாய செயற்கை என்க. இவ்வுண்மை வருமாறு:

"நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
 வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
 சத்தியாய் புவன போகந் தனுகர ணமும் உயிர்க்காய்
 வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே."
- சிவஞானசித்தியார், 2. 3 - 3.
"சித்தமாம் அவ்வி யத்தஞ் சிந்தனை யதுவும் செய்யும்
 புத்தியவ் வியத்திற் றோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து
 வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப்
 பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணிநிற்கும்."
- சிவஞானசித்தியார், 2. 3 - 8.
"தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
 வீழா இறக்கும் இவள் மாட்டும் - காழ் இலா
 மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
 அம்மனைக்கோல் ஆகிய ஞான்று."
- நாலடியார், 14.