பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

16

"நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
 புல்லறி வாண்மை கடை."
- திருக்குறள், 331.
     பூதங்கள், நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் எனப்படும் ஐந்தாகும். இவ்வைந்தும் முறையே, நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்னும் தன்மாத்திரைகள் ஐந்தினின்றும் தோன்றுவன. இவ்வுண்மை வருமாறு காண்க:

"சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
 தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே யொன்றுக்கொன்றங்
 கேற்றமாம் ஓசை ஆதி இருங்குணம் இயைந்து நிற்கும்
 ஆற்றவே விடயபூதம் அங்காங்கி பாவத் தாமே."
- சிவஞானசித்தியார், 2. 3 - 15.
"சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
 வகைதெரிவான் கட்டே உலகு."
- திருக்குறள், 27.
(ஏனையோர், பிரமத்தினின்று வானமும், வானத்தினின்று காற்றும், காற்றினின்று தீயும், தீயினின்று நீரும், நீரினின்று நிலமும் தோன்றியனவாகக் கூறும் மெய்ம்மையல்லாக் கொள்கைகள் ஒரு சிறிதும் பொருந்தா என மாதவச் சிவஞானமுனிவரனார் தக்க காரணங்காட்டிச் சிவஞானபோதப் பேருரைக்கண் ஓதியருளினர்.) ஆண்டுக் காண்க.

     'உபசாந்த' மென்னும் கடவுட்டன்மையினை வரும் செந்தமிழ்ப் பொதுமறையான் உணர்க:

"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
 யாண்டும் இடும்பை இல."
- திருக்குறள், 4.
     சிவபெருமானின் முழு முதற்றன்மையினைப் பிறவாமை இறவாமையென்னும் பெற்றியான் உணரலாம். இவ்வுண்மை வரும் திருப்பாட்டுகளான் உணர்க:

"பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்
    பெண்ணுருவோ டாணுருவு மாயி னான்காண்
 மறப்படுமென் சிந்தைமரு ணீக்கி னான்காண்
    வானவரு மறியாத நெறிதந் தான்காண்
 நறப்படுபூ மலர்தூபந் தீப நல்ல
    நறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர்
 சிறப்போடு பூசிக்குந் திருவா ரூரிற்
    றிருமூலட் டானத்தெஞ் செல்வன் றானே."
6. 30 - 5.
 
 1. 
உரைசேரு. 1. 132 - 4. 
 " 
அண்டசஞ். சிவஞானசித்தியார், 2. 4 - 17.