"கற்பாந்த . . . பொன்னாக்குவீர்" - ஊழிமுடிவில் தோன்றும் அளவிடற்கரிய பெருவெள்ளத்தினை ஒரு சிறிய கிணற்றினிடை வந்து அடங்கும்படி வைப்பீர், (மட்கலமுடைந்து பலனற்றதாக வறிதே கிடக்கும்) மண்ணோட்டினைக் கையாலெடுத்து ஆயிரத்தெட்டு மாற்றுள்ளதாகப் பேரொளிவிடும் செம்பொன்னாகச் செய்து திருந்த வைப்பீர்;
"உரகனு . அரிதோ" - நிலவுலகத்தைத் தாங்கும் ஆயிரந்தலைகளையுடைய பாம்பாகிய ஆதிசேடனும் இளைப்பாறும்பொருட்டு உங்களுடைய யோகதண்டமெனப்படும் முக்கோலின்கண் அவ்வுலகு சுமையாகத் தண்ணளியான் மீட்டிடவும் வல்லநீர், எளியேனுடைய மனமாகிய கல்லை அனலிற்பட்ட மெழுகுபோன்று உருகவைப்பது நுந்தம் வியத்தகு செயலுக்கு அரிதாகுமோ? (ஆகாதென்றபடி.)
"வேதாந்த . . . சித்தர்கணமே" - என்பதற்கு முன் உரைத்த உரையினையே உரைத்துக்கொள்க.
"வேந்தாந்த . . . சித்தர்கணமே"
(வி - ம்) அளி - வண்டு. துதைந்து - நெருங்கி. பத்மம் - தாமரை. நிதி - செல்வம். கிரீடம் - முடி. உரகன் - பாம்பு. யோகதண்டம் - முக்கோல்.
'பத்மநிதி சங்கநிதி' என்பனவற்றைக் கோடி முதலாகக் குறிக்கப்படும் எண்ணின் பெயர்போன்று அளவில்லாத எண்களைக் கொண்ட ஒருபெருந்தொகை எண்களைக் குறிக்கும் எண்ணின் பெயர் என்றலும் ஒன்று. செந்தாமரை போன்ற செம்பொற்குவியலைக் குறிப்பது பத்மநிதி. வெண்பொற்குவியலைக் குறிப்பது சங்கநிதி. இவற்றின் உண்மை வருமாறு:
| "சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து |
| தரணியொடு வானாளத் தருவ ரேனும் |
| மங்குவா ரவர்செல்வ மதிப்போ மல்லோம் |
| மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் |
| அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய் |
| ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் |
| கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் |
| அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே." |
| - 6. 95 - 10. |
| "செந்நெ லார்வயற் கட்டசெந் தாமரை |
| முன்னர் நந்துமிழ் முத்தஞ் சொரிந்திடத் |
| துன்னு மள்ளர்கைம் மேற்கொண்டு தோன்றுவார் |
| மன்னு பங்கய மாநிதி போன்றுளார்." |
| - 12. அரிவாட்டாயநாயனார், 20 |
(2)