பாரொடுநன் னீராதி யொன்றொடொன் றாகவே | பற்றிலய மாகுபோழ்து | பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் | பரந்திடி னதற்குமீதே | நீரிலுறை வண்டாய்த் துவண்டுசிவ யோகநிலை | நிற்பீர் விகற்பமாகி | நெடியமுகி லேழும் பரந்துவரு டிக்கிலோ | நிலவுமதி மண்டலமதே | ஊரென விளங்குவீர் பிரமாதி முடிவில்விடை | ஊர்தியரு ளாலுலவுவீர் | உலகங்கள் கீழ்மேல வாகப் பெருங்காற் | றுலாவின்நல் தாரணையினால் | மேருவென அசையாமல் நிற்கவல் லீருமது | மேதக்க சித்திஎளிதோ | வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற | வித்தகச் சித்தர்கணமே. |