சொல்லால் முழக்கிலோ சுகமில்லை மௌனியாய்ச் | சும்மா இருக்கஅருளாய் | சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |
(பொ - ள்) "கல்லேனு . . . உண்டோ" - ஐயனே! வன்மைமிக்க கருங்கல்லும் (அதனினும் மிக்க வன்மையுடைய பேரழலால்) ஒரு காலத்தில் உருகுதலைச் செய்யும்; (அக் கருங்கல்லினும்) மிக்க வன்மையான அடியேன் கல்நெஞ்சம் ஒன்றானும் உருகவில்லையே? நின் திருவருளுக்குப் பொருந்தாத வன்மையையும் அடியேன் நெஞ்சினுக்கு ஆக்கிக் கற்பிக்கவும் படைத்தற்குரிய நான்முகனும் ஒரு கடவுளாவனோ? உள்ளத்துரனும் தெள்ளத் தெளிந்த மதித்திறனும் மிக்க வல்லான் ஒருவன் அமைத்ததே வாய்க்காலென்று யாவருங் கொள்ளும் பெருமுறைமைக்கு ஏதுங் குற்றம் உண்டாகுமோ?
"வானமாய் . . . உண்டோ" - திருவருட்பெரு வெளியாகிய வானமாய் நின்று பேரின்பப் பெருமழையாய்த் தண்ணருள் புரிந்து இறங்கி வந்து அடியேனை வாழ்வித்தருள்வது உன்னுடைய தனிப்பெரும் பொறுப்பாகும். பெற்ற தாய்க்கு உற்றசேய் பொல்லாததாக அமைந்துவிடின் (அத் தாய் அச்சேயினை அன்பினால் திருத்தி ஆட்கொள்வதன்றித் தள்ளிவிடுதல் முறைமையாகுமோ? (அங்ஙனம் தள்ளப்பட்டால்) அச் சேயினுக்கு அடைக்கலமாகத் தங்குவதற்கு வேறொறா தனியிடமும் உண்டோ?
"பொய்வார்த்தை . . . . . . . . . அருளாய்" - நடிப்பளவாகவேனும் பொய்யுரை புகலுவேனாயின் அடியேன் திருவருளுக்குரியன் அல்லனாய் வேறானவனாவன்; மேலும் மிகவுந் தாழ்ந்தவனுமாவன். ஐயோ! சொற்கோவைப்படுத்து வியப்பும் அழகும் பொருந்த விளம்பி முழக்கு வேனாயின் அதனால் விளையும் நன்மை ஒரு சிறிதும் இல்லை; பேச்சற்ற நிலையாம் மௌனியாய் (அதனால் விளையும் இன்ப நுகர்வியாய், அவ்வின்ப நுகர்வேயன்றி வேறெச்) செயலுமற்றுச் சும்மாவிருக்கும்படி திருவருள் புரிவாயாக.
"சுத்தநிர்க் . . . சுகவாரியே" -
(வி - ம்.) கருணை - பேரருள், பெருந்தண்ணளி. வல்லான் - நன்மையினால் வல்லானானவன். வழக்கு - முறைமை. இழுக்கு - குற்றம்.
பண்டை நற்றமிழ் நான்மறையின்வழித் தொண்டாற்றுபவரை இறைவன் திருவருள் கைக்கொண்டு நன்னெறிக்கண் உய்த்து இன்புறுத்தும். அல்லாதாரை அவர் போக்கில் விட்டு அதனால் அவர் துன்பெய்தி அத் துன்பினைப் போக்க வேறு வழியின்மையால் சிவபெருமானை நினைந்து அவற்கன்பராயபொழுது சிவனருள் கைக்கொண்டு அத் துன்பகற்றி இன்ப வாழ்வில் வைத்தருளும். அம் முறையில் நெஞ்சுருக நினைக்குமாறு வேண்டிக்கோடலே நம் தலைக்கடனாகும். இவ்வுண்மை வருமாறு காண்க :