பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

172
         "சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -

     (வி - ம்.) பற்றுவன - பற்றப்படுவனவாகிய வெளிப்புலன்கள், புலன்களெனினும், பொருள்களெனினும், விடயங்களெனினும் ஒன்றே. அவை சுவைக்கப்படும் பொருள்கள் முதலாக ஐவகைப்படும். நிராசை - ஆசையின்மை; அவாவின்மை. யோகம் - அகத்தவம். பிராணலயம் - உயிர்ப்பொடுக்கம்.

     "கனிந்தகனி கனிவிக்க வந்தகனி" - வாழைக்குலையின்கண் செவ்வி முதிர்ந்த காய்களுள் முதற்கண் ஒரு காய், கனியாகும்; பின் ஏனைய காய்கள் முறைமுறையாகக் கனியாகும். இதனை முற்கனிந்த கனி ஏனையவற்றைக் கனிவிக்க வந்த கனி என்றனர். ஒரு குடும்பத்தில் கல்விகற்ற மூத்தவன் தன் உடன்பிறப்பார்கட்குக் கற்பதன்கண் ஊக்கம் வர எடுத்துக்காட்டாகவும் தன்னாலியன்றதைக் கற்பிக்கத் துணையாகவும் அமைந்திருப்பது போன்றாகும். இதனால் அறியக் கிடப்பது கல்வி, செல்வம், வலிமை, பண்பாடு இவற்றான் மிக்கவர்கள் அவற்றைப்பெற்று முன்னேற விழைந்து பின்னிற்பார்க்குப் பரிவுடன் வலியவந்து நல்குவதற்கேயாம் என்னும் மெய்ம்மையாம். இதனை வருமாறு நினைவுகூர்க:

கல்வியொடு செல்வம் கருதுவலி மிக்கபண்பர்
இல்லவர்க்கிங் காக்கல்கடன் எண்.
     இவற்றால் பெறப்படும் உள்ளுறை இறைவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன். ஆருயிர்கள் இயல்பாகவே பாசங்களோடு கூடியவை, அவ்விறைவன் அவ்வுயிர்களின் பாசத்தை முதிர்வித்து அகற்றித் தன்போலாக்கித் திருவடியின்பத்தை நல்கியருள்கின்றனன் என்பதே. "கனிந்தகனி கனிவிக்கவந்த கனி" என்பதாகும். இதனை விளக்கவந்த ஒப்புமை வாழைக்கனியாகும். வாழைக்குலையின்கண் உள்ள காய்கள் ஒன்றுபோல் முதிர்ந்து கனியாவதில்லை. தோன்றிய முறைப்படி ஒவ்வொன்றாய் முதிர்ந்து கனியாகும். முதற்கண் முதிர்ந்து கனிந்தகனி ஏனைக் கனிகளைக் கனிவித்ததென ஏற்றுரையாகக் கூறினர். முதற்கண் கனிந்த கனியை முதிர்வித்துக் கனிவித்தது தோன்றாத் துணையாக நின்றருளும் சிவபெருமானே. அதுபோல ஏனைக்கனிகளைக் கனிவித்தருளியவனும் அச் சிவபெருமானே. எனினும் அவனேர்நிற்கும் கனியின் வழியாகக் கனிவித்தருளுவதும் ஒருபுடையான் நோக்கின் வாய்மையுமாம். ஏற்றுரை - முகமன்; உபசாரம்.

     உலகிடை வழி வழியாகக் காணப்படும் ஆசான்மார் அனைவர்கட்கும் முதலாசான் சிவபெருமானே. கற்பார் அனைவரும் தங்கள் தங்கட்கு நேர்நின்று கற்பிக்கும் ஆசானையே ஆசானென்றறிகுவர். அம்முறைபோன்றதே கனிவிக்க வந்த கனி என்பதாம். இம்முறை "தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்" டென்பதமாம். அங்ஙனம் உணர்த்தும்வழி முன்னர்த் திருவருளால் கனிவித்து ஆண்டுகொண்ட ஓர் ஆருயிரை இடனாகக் கொண்டுநின்று ஏனைய செவ்விவாய்ந்த உயிர்கட்கு உணர்த்தியருளுகின்றனன். அவ்வுண்மை "அவன் அன்னியமின்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான்." (8. 2. ஏது.) என்பதனால் விளங்கும். இங்ஙனம் சிவபெருமான்