சாதித்த சாதனமும் யோகியர்கள் நமதென்று | சங்கிப்ப ராதலாலே | தன்னிலே தானா யயர்ந்துவிடு வோமெனத் | தனியிருந் திடினங்ஙனே | சோதிக்க மனமாயை தனைஏவி னாலடிமை | சுகமாவ தெப்படிசொலாய் | சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |
(பொ - ள்) "பேதித்த . . . அறிவிலே" - (உலகோர் பிறப்பற்றுச் சிறப்புற்று உய்யும் வண்ணம் அவரவர் தகுதிகட்கு ஏற்ப) ஒன்றோடொன்று மாறுபட்ட சமய நெறிகள் பலவாயின; அவை ஒன்று சொன்னபடி ஒன்று சொல்லுவதில்லை. (அதனால்) தனியே துறவாகியிருந்து வாய்வாளாப் பெரியோர்கள் (அகத்தவமாகிய யோகப்பயிற்சியால்) மனவொடுக்கமுற்று ஒன்றையே உணர்வதாகிய நிருவிகற்பத்தினால் அவர்களும் ஏதும் பேசார்கள்; (உலகிடைக் காணப்படும் சமயக் குருமார் அனைவர்க்கும் மேலாய்) நன்மைத் தெய்வக் குருவாய் விளங்கும், அன்பறிவாற்றல்களாகிய மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமான் ஆலமர் செல்வனாய் எழுந்தருளியிருந்து அறிவின்கண் அருமறை பகர்ந்ததும் அறிவடையாளமாகிய திருக்கைக் காட்டேயாம்.
"போக்கு . . . எவர்" - (கோலமும் இடமும்பற்றிப்) போக்கும் வரவும் இலதாய், பேரின்பம் இடைவிடாது உண்டாவதாய் உள்ளவொன்றைச் சொல்லின் (வாயிலாகச் சொல்லிப்) போதிக்கும் திறத்தினர் வேறு யாவர்?
"ஐயனே . . . சொல்லாய்" - முதல்வனே! அடியேன் இதுகாறும் பயின்றுவந்த அகத்தவமாகிய யோகப் பயிற்சியின் தன்மைகளையெல்லாம் யோக நிலையிலுள்ளார் எங்களுடையனவென்று தடுத்துரைப்பர்; ஆகையினாலே யானாகவே என்னை மறந்து என்னில் தனித்திருப்பேன் என்னில் அவ்விடத்தே (தேவரீர்) மனத்தை நிலைகுலையும்படி மாயையால் மயக்குவித்தால் அடிமை நல்லின்பமுற்று வாழ்வதெப்படி? தண்ணளி சுரந்து கூறியருள்வாயாக;
"சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -
(வி - ம்.) பேதித்தல் - வேறுபடுத்தல். நிருவிகற்பம் - பொருளின் தோற்றம் மட்டும் காண்டல் (அதன் சிறப்பியல்கள் ஒன்றுங்காணாமை.) பரமகுரு - ஏனைச் சமயகுருமார் அனைவரும் உ.ண்ணின்றிறை இயக்க இயங்கும் உயிரினத்தவரே. இந்நிலையினை அதிட்டான பக்கமென்பர். தென்முகக்கடவுளாகிய இறைவன் நேரே எழுந்தருளிவந்து ஆட்கொள்பவர். அதனால் அவர் ஒருவரே பரமகுரு என்க. இந்நிலை ஆவேச பக்கம் என்ப. (173). சாதனம் - பயிற்சி. சங்கித்தல் - ஐயுறுதல்; தடுத்தல். சோதிக்க - ஆய்வுகொள்ள; பரீட்சிக்க. சுகம் - இன்பம்.