காதல் கைமிக்கு உள்ளமுருகிப் போற்றி போற்றி எனத் தமிழ் மந்திரம் புகன்று நறுமண மலர்கள் தூவி வழிபட எழுந்தருளியிருக்கும் திருப்படிமங்களின் நிலையிலோ;
"திக்கு . . . அதனிலோ" - திசைகளிலோ, திசைமுடிவிலோ, மேலான வெளியிலோ, விளங்குகின்ற விந்துநாத நிலைகளிலோ, மறை முடிவாகிய வேதாந்தத்திலும், முறைமுடிவாகிய சித்தாந்தத்திலும் விளங்குகின்ற நிலைகளிலோ, சுட்டியுணரப்படுவதாகிய கட்புலனாகும் பொருள்களிலோ, கட்புலனாகாது கருத்துப்புலனாகும் காணாதநிலையிலோ, நாடியுணரப்படும் முப்பாழாகிய சூனியத்திலோ;
"காலமொரு . . . புகலாய்" - இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் கூறப்படும் காலங்களிலோ, (ஆருயிர்கட்கு மாயா காரியமாகிய உடம்பு உலகுகளைப் படைத்த ளிக்கும் படைப்பாகிய) பிறவியிலோ, கருவி கரணங்களின் வழிச் செல்லாது, அவற்றைத் தம் வழிப்படுத்துத் தவநிலையுற்று அவற்றினின்று நீங்கி இறையுள்ளுதலின்கண் உறைத்து நிற்கும் தொண்டர்களிடத்திலோ, நீ மிக்கோங்கி வீற்றிருந்தருள்வது? இவ்வுண்மையினை நின் திருவடித் தொழும்பினையே பூண்டொழுகும் அடியேனுக்கு உள்ளபடியான நிலைமையினைக் கண்ணோட்டம் புரிந்து புகன்றருள்வாயாக.
"சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -
(வி - ம்.) அலரி - ஞாயிறு. அனல் - தீ. மதி - திங்கள். தெண்டனிடல் - வீழ்ந்து வணங்கல். மூர்த்தி - தெய்வத் திருவுருவப் படிமம். படிமம் - விக்கிரகம். சூனியம் - பாழ். பிறவி நிலை - படைப்பு நிலை. கருவி - புறக்கருவி. கரணம் - உட்கருவி.
எல்லா இடங்களையும் விடத் தொண்டர்களினிடமே நனிமிகச் சிறந்ததாகக் கொண்டருள்வரென்னும் உண்மை முடிவில் கூறியதனால் உணரலாம். இவ்வுண்மை வருமாறு :
| "என்னி லாரு மெனக்கினி யாரில்லை |
| என்னி லும்மினி யானொரு வன்னுளன் |
| என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் |
| கென்னு ளேநிற்கு மின்னம்ப ரீசனே." |
| - 5. 21 - 1 |
| "தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்துத் |
| தன்னுணரத் தன்னுள் இருத்தலால் - தன்னுணரும் |
| நேசத்தர் தம்பால் நிகழுந் ததிநெய்போற் |
| பாசத்தார்க் கின்றாம் பதி." |
| - சிவஞானபோதம், 12 - 3 - 1. |
| "தொண்டர்க ளிடத்தும் வானோர் தொழுந்திரு மேனி தானும் |
| அண்டரும் கண்டி லாத அண்ணலே எனவ ணங்கி |
| வெண்தர ளங்கள் சிந்த விழிமொழி குழறி மெய்யே |
| கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே." |
| - சிவப்பிரகாசம், 98. |
(10)