| தன்னை ரிலாததோ ரணுவென்றும் மூவிதத் |
| தன்மையாங் காலமென்றுஞ் |
| சாற்றிடுஞ் சிலசமயம் இவையாகி வேறதாய்ச் |
| சதாஞான ஆனந்தமாய் |
| என்னே யெனேகருணை விளையாட் டிருந்தவா |
| றெம்மனோர் புகலஎளிதோ |
| இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி |
| எங்குநிறை கின்றபொருளே. |
(பொ - ள்) "அன்னே . . . சிலசமயம்" - (சில நெறியினர் தாங்கள் வணங்குந் தெய்வத்தைப் பெண்பாற் கோலமாகக் கொண்டு திருவருள் வடிவான) தாயே! தாயே! என்று கனியன்பு கொண்டு மொழிவர்; (அதுபோல் உன்னைச் சில நெறியினர்) தந்தையே! தந்தையே! என்று (ஆராமை மேலீட்டால்) கதறுவர்; சில நெறியினர், இவ்விரண்டு மொழித்து மனம் போனவாறு பேயொத்துக் கடவுள் என ஒரு பொருளுண்டோவென்று மருண்டு கூறுவர் கூற்றுப் பொய்யாகும் என்று ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றியவாறாகச் சொல்லுவர். இஃதவர்தம் அறியாமையினையே காட்டும்.
"மேல் . . . சாற்றிடும்" - மேலும் சில நெறியினர், சொல்ல ஒண்ணாத அறிவுப் பேரொளியென்று கூறுவர்; சிலர் வான வெளியே தெய்வமென்பர்; மற்றும் சிலர், ஒலியாகிய நாதமும் ஏனையவுமே தெய்வமென்பர்; சிலர் தனக்கு வேறு ஒப்பில்லாததாய்த் தானே தனக்கு ஒப்பாய் உள்ள நுண்மையணுவே முதலென்பர்; இறப்பு நிகழ்வு எதிர்வு என வழங்கப்படும் காலமே தெய்வமென்பர்; (இங்ஙனம் பல கொள்கையினரும் தத்தம் மனம்போன்று பேசுமாறு) கூறிய இவையுமாய், இவற்றிற்கு வேறுமாய், என்றும் பொன்றா மூதறிவாய்ப் பேரின்பமாய் விளங்காநிற்கும் நின் பெருந்தண்ணளியின் திருவிளையாடலை என்னே, என்னே என்று வியப்புற்று விளம்புவதற்கு எளிதாகுமோ?
"இகபரமிரண் . . . பொருளே" -
(வி - ம்.) அன்னை - தாய். ஐயா - தந்தை. அலறுதல் - கதறுதல். பிதற்றுதல் - ஒன்றையே பல முறை பேசல். வெளி - வான்; ஆகாயம். சதா - எப்பொழுதும். ஞானம் - மூதறிவு. ஆநந்தம் - இன்பம்.
அணுவின் கொள்கை ஒவ்வாமை வருமாறு :
| "அழிந்தபின் அணுக்கள் தாமே அகிலமாய் வந்து நின்று |
| கழிந்திடும் கன்மத் தென்னிற் கன்மமும் அணுவுங் கூட |
| மொழிந்திடும் சடமே யாகி முடிதலான் முடியா செய்தி |
| ஒழிந்திடும் அணுரூ பங்கள் உலகெலாம் ஒடுங்கும் அன்றே." |
| -சிவஞானசித்தியார், 1. 1 - 10. |