வல்லாள ராய்இமய நியமாதி மேற்கொண்ட | மாதவர்க் கேவல்செய்து | மனதின் படிக்கெலாஞ் சித்திபெற லாஞானம் | வாய்க்குமொரு மனுவெனக்கிங் | கில்லாமை யொன்றினையும் இல்லாமை யாக்கவே | இப்போ திரங்குகண்டாய் | இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி | எங்குநிறை கின்றபொருளே. |
(பொ - ள்) "நில்லாது . . . .காணவிலை" - (மாயா காரியமாய் மலத்தோடொட்டிய மன்னுயிர்கட்கு மறைப்பாற்றலால் படைத்தளிக்கப்பட்ட) இவ்வுடல் (நீரிற்குமிழிபோல்) நிலை நில்லாது என்னும் உண்மை நினைவு அடியேனுக்கு உண்டு; அத்தகைய உடம்பு நிலைநிற்கும்படி அடிகள் பேச்சற்ற பெருங்குரவனாய் எழுந்தருளி வந்து செவ்விதும் எளிமையும் வாய்ந்த வழிவகைகளை அருளிச் செய்தனிர்; அந்தோ இதனைக் கூறியருளியபடி உறுதியாக நின்று கடைப்பிடித் தொழுகவேண்டுமென்று நாடினால், மெய் எனப்படும் தத்துவ நூல்களை நல்லாசான் பால் கற்றுணராத எளியேன் மனமோ ஒடுக்கமெய்தி உடம்பின்பால் வெறுப்புக் கொள்வதாகக் காணவில்லை;
"ஆகையாலே . . . ஞானம் வாய்க்கும்" - ஆதலாலே, கைப்பிச்சை வாங்கி உண்ணும் உணவு எளியேன் மனதுக்கு ஒருபொழுதும் ஒவ்வுமாறில்லை: எந்நாளும் உம்முடைய திருமுன்நின்று காட்சி விலகாது தீமை நீக்கலாகிய இயமமும், நன்மை யாக்கலாகிய நியமமும் இடைவிடாது கடைப்பிடித்தொழுகுதலை மேற்கொண்ட, திண்மையாளராய்ச் சிவனடி மறவாப் பெருந்தவத்தோர்க்கு அவர்தம் ஏவலைத் தலைக்கொண்டு பணிசெய்தால் உள்ளத்தின் உள்ளியபடியெல்லாம் கைகூடப்பெறலாம். அதன்மேல் திருவடியுணர்வாம் சிவஞானமும் எளிதின் எளியேற்கு வாய்க்கும்;
"ஒருமனு . . . கண்டாய்" - (மேலும் அடியேன் அடிகள்பால்) விண்ணப்பித்துக் கொள்ளவேண்டிய விண்ணப்பம் ஒன்றுளது; (அஃதாவது) அடியேனுக்கு மூதறிவாகிய சிவஞானத் திருவருள் கிட்டாமையாகிய வறுமையினை இல்லாதொழிக்கவே இப்பொழுது இரங்கியருள்வாயாக.
"இகபரமிரண் . . . பொருளே" -
(வி - ம்.) தேகம் - உடல். உபாயம் - எளிய வழிவகை. அனுட்டித்தல் - கடைப்பிடித்தல். உபாதி - வெறுத்துத் தள்ளல். சித்திபெறல் - கை கூடப் பெறல். இல்லாமை - மெய்யுணர்வில்லா வறுமை.
யாக்கையின் நிலையாமையினை வருமாறுணர்க :