முத்தனைய மூரலும் பவளவா யின்சொலும் | முகத்திலகு பசுமஞ்சளும் | மூர்ச்சிக்க விரகசன் னதமேற்ற இருகும்ப | முலையின்மணி மாலைநால | வைத்தெமை மயக்கிஇரு கண்வலையை வீசியே | மாயா விலாசமோக | வாரிதியி லாழ்த்திடும் பாழான சிற்றிடை | மடந்தையர்கள் சிற்றின்பமோ | புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத | பொன்னாட்டும் வந்ததென்றால் | போராட்ட மல்லவோ பேரின்ப முத்திஇப் | பூமியி லிருந்துகாண | எத்தனை விகாதம்வரும் என்றுசுகர் சென்றநெறி | இவ்வுலகம் அறியாததோ | இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி | எங்குநிறை கின்றபொருளே. |