பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

200
மேல் மணிமாலைகள் பின்னிக்கிடந்து தொங்கவைத்து, எம்போன்றாரை யெல்லாம் நீங்கா மயக்கங் கொள்ளச்செய்து (அதன்மேலும் வேலனைய மைதீட்டிய) இருகண்களாகிய வலையினை வீசி;

     "மாயா . . . புசித்து" - மாயையின் விளையாட்டாகிய பெருமயக்கப் பெருங்கடலில் மிகவும் ஆழச்செய்து (நீங்காத் துன்பத்தைத் தந்து வாழ்வை) பாழாக்கும் சிறிய இடையினையுடைய இளம்பெண்கள் வாயிலா வரும் சிற்றின்பத்தினைப் புதிய அமிழ்த இன்பமென நுகர்ந்து;

     "விழி . . . அறியாததோ" - கண்களின் இமைகள் பொருந்தா இயல்பினையுடையவர் வாழும் பொன்னாடென்னும் துறக்கமாகிய இன்பவுலகின்கண் வாழும் தேவர்க்கும், பெண்களின் மயக்கும் மாயம் வந்து துன்புறுத்துமென்றால் (அம் மாயையினை வெல்லுதற்குமுடியாத நிலையில்) பெரும் போராட்டமாகவன்றோ முடியும்; அழியாப் பேரின்ப முத்தியினை இந்நிலவுலகத்திருந்து கண்டு நுகர எத்துணைத் தடைகள் அடுக்கடுக்காய் வரும் என்று சுகர் சென்ற துறவு நெறியினை இவ்வுலகோர் அறியாரோ? (அறிவர் என்றபடி.)

         "இகபரமிரண் . . . பொருளே" -

     (வி - ம்.) மூரல் - பல். விரகம் - காமம். சன்னதம் - வெறி. கும்பம் - குடம். நால - தொங்க. விலாசம் - விளையாட்டு. மோகம் - மயக்கம்; பெரு வேட்கை. வாரிதி - கடல். போராட்டம் - சண்டை. விகாதம் - தடை.

     மாயப்போராட்ட வன்மையினை வருமாறுணர்க :

"ஞானவாள்1 ஏந்துமையர் நாதப் பறையறைமின்
 மானமா ஏறுமையர் மதிவெண் குடைகவிமின்
 ஆன நீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
 வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே."
- 8. திருப்படையெழுச்சி - 1.
     (வாள் - அஞ்செழுத்து. நாதம் - தத்துவக்கடப்பு. மானமா - திண்மை; உரம்; வைராக்கியம். குடை - திருவடிநினைவு. நீறு - நீங்கா அரண். வாளஞ் செழுத்தோசை மாறல்மெய் மானமுரம், நீள்குடை தாள் நீறரணாம் நேர்.)

     தேவர்கள் மயங்கி நிலையினிழிந்து இழுக்குற்றமை வருமாறு :

     அரி பிருந்தைபாலும், அயன் வித்தியாபரணைபாலும், வானவர் கோன் அகலியைபாலும், தீக்கடவுள் இருடி மனைவியர்பாலும், காற்று குசநாபன் பெற்ற பெண்கள்பாலும், பகலவன் சஞ்சிகைபாலும், நிலவோன் தாரைபாலும் மயங்கி இழுக்குற்றுப் பழிபெற்றமை பழங்காதையானுணரலாம்.

(10)
 
 1. 
'படைக்கல.' 4. 81. 8.