பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

201
உன்னிலையும் என்னிலையும் ஒருநிலை யெனக்கிடந்
    துளறிடும் அவத்தையாகி
  உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண்
    டொளிக்கின்ற இருளென்னவே
தன்னிலைமை காட்டா தொருங்கஇரு வினையினால்
    தாவுசுக துக்கவேலை
  தட்டழிய முற்றுமில் லாமாயை யதனால்
    தடித்தகில பேதமான
முன்னிலை யொழிந்திட அகண்டிதா காரமாய்
    மூதறிவு மேலுதிப்ப
  முன்பினொடு கீழ்மேல் நடுப்பக்கம் என்னாமல்
    முற்றுமா னந்தநிறைவே
என்னிலைமை யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம்
    எந்நாளும் வாழிவாழி
  இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
    எங்குநிறை கின்றபொருளே.
     (பொ - ள்) "உன்னிலையும் . . . தட்டழிய" - (எங்கும் நீங்காதுறை இறையாம் முதல்வனே!) உன்னுடைய பேரறிவு நிலையும், எளியேனுடைய (நீ அறிவித்தாலறியும் தன்மைவாய்ந்த) சிற்றறிவு நிலையும் (வேறுபாடில்லாத) ஒருநிலையென (ஆணவமேலீட்டால்) உளறிடும் நிலையதாகி, தன் வடிவினைக் காட்டாத ஆணவ வல்லிருள் ஒளியினைக் கண்டவளவானே ஒடுங்கி ஒளிக்கும் புறவிருளின்மிக்கதென்று கூறும்படி தன்னிலைமையுங் காட்டாது ஒடுங்க; இருவினைகளென்றும் அலைகள் இடையீடின்றி மேலோங்கி வருகின்ற இன்பத்துன்பங்களாகிய பெருங்கட லிற்பட்டுத் தடுமாற்றமாகிய பிறப்பினையெய்த,

     "முற்றுமில் . . . வாழி" - (ஆக்கப்பாடென்று சொல்லப்படும்) காரிய மாயை (என்றும் ஒன்றுபோல் நிலைநில்லாமையால்) பொய்மாயை உருவாந் தன்மைத்திட்பமுற்று அனைத்துலக வேறுபாடான கூட்டுப்பொருளாகத் தோன்றும் முன்நிலை நீங்கும்படி பிரிக்கப்படாத எங்குநிறை முழுவடிவாய்த் தோன்றும் மூதறிவெனப்படும் திருவடியுணர்வு மேலோங்கித் தோன்றியருள (அவ்வறிவினுக்கு) முன்னென்றும், பின்னென்றும், கீழென்றும், மேலென்றும், நடுஎன்றும், பக்கமென்றும் பிரித்துச் சொல்லமுடியாதபடி திகழ்கின்ற முழுமையான பேரின்பப் பெருநிறைவே! அடியேனுடைய நிலைமையாய் அதனுள் அடங்கிநிற்குமியல்பினை எளியேனுக்கு அருளிச்செய்த நின் திருவருள் வடிவம் எந்நாளும் வாழ்க! வாழ்க!