சித்தம்உளன் நான்இல்லை எனும்வசனம் நீரும் | தெரியார்கள் தெரியவசமோ | செப்புகே வலநீதி யொப்புவமை யல்லவே | சின்முத்தி ராங்கமரபில் | சத்தமற எனையாண்ட குருமௌனி கையினால் | தமியனேற் குதவுபொருளே | சர்வபரி பூரண அகண்டதத் துவமான | சச்சிதா னந்தசிவமே. |
(பொ - ள்) கைத்தலம் . . . . . . . உரையுமில்லை - ஒருவர்தம் உள்ளங்கையின்கண் காணப்படும் நெல்லிக் கனியானது (புறத்தே தெளிவாகக் காணப்படுவது போன்று அதனகத்தேயுள்ள வரி நார்களும்) தெளிவாக விளங்கும் தன்மை போன்று வாழ்க்கை நூலாகிய வேதத்தினும், வழிபாட்டு நூலாகிய ஆகமத்திலும் அறிய வேண்டிய அறிவுகொள் பொருள்கள் நான்கு வகைப்படும்; அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாகும்; இந் நான்கனுள் மிக்க மேன்மையுடையது வீடென்பதாகும்; இவ்வீட்டின்பத்தினை எண்ணிப்பார்க்குமிடத்து வழியளவை எனப்படும் அனுமானம் முதலாக அளவைகள் பலவாகக்கொள்ளும் பொருந்துமாறுகளும் பலவாகும்; இந்நிகழ்வுகள் வேறுபாடு தோன்றாது ஒற்றித்து இன்புறு நிலைக்கண் உண்டாவனவல்ல; அங்கு ஒன்று இரண்டு என்று சொல்லுவதற்குரிய உரைநிகழ்வு இல்லை;
"நீயுமிலை . . . வசமோ" - முதல்வனாகிய நீயும் இல்லை, அடிமையாகிய யானும் இல்லை என்று சழக்குரை உரைப்பது சூழ்ச்சியே அன்றி உண்மையாகாது; (மெய்ம்மையான் நோக்கின்) (பேரின்பப்பேறளிக்கும் ஆண்டவனாகிய) நீயும் உண்டு, (அவ்வின்பப் பேற்றினைத் துய்த்துக் கொண்டிருக்கும் அடிமையாகிய) யானுமுண்டு; (ஆனால்) அடியேன் உண்டு என்னும் உண்மையினை நீ நன்கு அறிவாய்; இவ்வுண்மையினைத் தெரிந்து கொள்ளும் திருவருட் பேறில்லாதவர் எங்ஙனம் அறிந்து கொள்ளுதல் முடியுமோ? (முடியாதென்க.)
"செப்பு . . . . . . பொருளே" - வேதாகமங்களாகிய மறை முறைகளிற் சொல்லப்படும் வீடுபேற்று நெறிமுறைகளை ஒப்புவமைகளைக் காட்டிக் கூறுவதற்கு முடியுமோ? அஃது அங்ஙனங் கூறுதற்குரிய பொருளல்லவே? அறிவடையாளமாகிய சின்முத்திரையை உறுப்பாகக் கொண்டு திகழும் பேச்சற்ற முறையினால் உரையொடுங்க அடியேனை எளி வந்து ஆண்டுகொண்டருளிய சிவகுருவின்திருக்கையடையாள வாயிலாக அடியேற்குத் திருவடிப் பேற்றினை அளித்தருளும் மெய்ப்பொருளே;