பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

226
தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ்
    சந்தையிற் கூட்டம் இதிலோ
  சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை
    சதுரங்க சேனையுடனே
வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம்
    வஞ்சனை பொறாமைலோபம்
  வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ
    வாஞ்சனையி லாதகனவே
எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே
    இரவுபக லில்லாவிடத்
  தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே
    யானென்ப தறவுமூழ்கிச்
சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ
    தேடரிய சத்தாகிஎன்
  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
     (பொ - ள்) "தந்தைதாய் . . . கனவே" - (அருந்தவமிருந்து முதல்வன் திருவடியைப் பொருந்த வழிபட்டு) பெற்று வளர்க்கும் தந்தையும் தாயும் (விருப்ப நீங்கா) உறவினரும், (காதன் மிக்க) வாழ்க்கைத் துணைவியரும், (இன்பம் பெருக்கும்) மக்களும் என்று சொல்லப்படும் கூட்டமெல்லாம், (பலபண்டம் ஒருங்கு தொகையாக விற்கப்படும்) சந்தையில் சந்திக்கும் கூட்டத்தை யொக்கும்) இக்கருத்தில் ஒரு சிறிதும் ஐயமில்லை, (மேலும்) அழகிய மாடமாளிகைகளும், மேடைகளும், நால்வகைப் படைகளுடனே மன்னர் மன்னராம் வேந்தராய் வீற்றிருந்து ஆளும் வாழ்வும் (எண்ணுங்கால்) கண்கட்டு மாயம் ஆகிய அழகினை யொக்கும்; வஞ்சம், அழுக்காறு, இவறன்மை ஆகிய தீமைகள் நிறைத்துவைக்கப்பட்டுள்ள, மனம் என்று சொல்லப்படும் புழுச்சேர்ந்த அழுக்குக்கலமே; விருப்பங்கொள்ளுதற் கில்லாத கனவேயாகும்;

     "எந்தநா . . . . . . யென்கொலோ" - வாழ்வுந் தாழ்வும் ஆகிய எல்லாக் காலங்களிலும் ஒத்தவுள்ளத்தொடு சரியெனத் தெளிந்து (மாயாகாரிய வெளியையும் தன்னுள் அடக்கி என்றும் ஒரு படித்தாய் நிலவும்) இரவு பகல் இல்லா திருவருட் பெருவெள்ளத்துள் நன்றாய் மூழ்கியான் எனது என்னும் பிறப்பிற்கு வாயிலாகிய செருக்கற்று நிற்கும் நிலைபெறாது அடியேன் உள்ளம் தெளிவு அடையாமல் சுழன்று கொண்டிருப்பது எதன் பொருட்டு?

         "தேடரிய . . . ஆனந்தமே" -