பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

225
     "சோராத . . . செய்வையோ" - நீங்காத பேராசையாகிய காட்டாறு வான்யாறு கரந்தது போன்று விடாது வந்து ஆர்த்தல் செய்யக் கைத் தோணிக்காரரைப் போன்று மூதறிவாகிய கப்பலும் கைவிட்டகல, செய்வது இன்னதென்றறியாது அறிவுமயங்கி (கப்பற்கொள்ளையர் போன்று) கள்ளக்கப்பலையொத்த கூற்றுவனுடைய ஏவலர்கள் வந்து விடுவாரே என்று மிகவும் நடுங்கிக் கண்களினின்றும் துன்பக்கண்ணீர் விடாது மலையருவிபோன்று பொழிந்து காட்டும் அடியேன் சொல்ல வொண்ணாத் திருவடிப் பெரும்பேறாகிய முத்திக்கரையினைச் சேரும் படி தண்ணளி புரிந்தருள்வையோ? ('சத்தாகியென் . . . ஆனந்தமே' என்பதற்கு வருமிடந்தோறும் முதற்பாட்டிற் கூறிய உரையினைக் கூறிக்கொள்க).

     (வி - ம்.) இருட்கடல் - கருங்கடல். மகரம் - சுறாமீன்; முதலை. திரை - அலை. ஏற்றுண்டு - அடிபட்டு. புற்புதம் - நீர்க்குமிழி. துப்பு - பவழம். சண்டமாருதம் - சூறைக்காற்று. சோராத - நீங்காத. கைப்பரிசு - கைத்தோணி. வங்கம்-கப்பல்.

     கைத்தோணியென்பது மூங்கிலின் அகணிகளால் கூடை போன்று வட்டமாகப் பின்னி மேற்புறத்தில் தோலால் மூடப்பட்டிருப்பதாகிய ஒருவகைத் தெப்பம். அகணி - நார்; மூங்கிலின் மெல்லியபிளவு.

     இப் பாட்டின்கண் பிறவியைக் கடலாகவும், செருக்கைச் சுறாமீனாகவும், இருவினைகளை அலையாகவும், மங்கையர் மயக்கத்தைச் சுழற்காற்றாகவும், ஆசையைக் காட்டாறாகவும், மூதறிவை (வங்கம்) - கப்பலாகவும், கூற்றுவன் ஏவலரை வஞ்சப்படகாகவும், திருவடிப் பேற்றினைக் கரையாகவும் உருவகஞ் செய்யப்பட்டுள்ள உண்மை காண்க :

     தோணித்தொழிலுண்மையினை வருமாறுணர்க :

"துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர்தம்மை
 இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே
 பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப்பொய்பொருந்தா
 அன்பர்க் கணியன காண்கஐ யாறன் அடித்தலமே."
- 4. 12 - 6.
     இதன்கண் காணப்படும் உருவகம் வருமாறுணர்க :

"தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
    தடந்திரையான் எற்றுண்டு பற்றொன் றின்றிக்
 கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்
    கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்
 டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி
    அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை
 முனைவனே முதலந்த மில்லா மல்லற்
    கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்க னேற்கே."
- 8. திருச்சதகம் - 27.
(2)