பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

224
"ஒன்றிரண் டாகி ஒன்றின் ஒருமையாம் இருமை யாகி
 ஒன்றிலொன் றழியும் ஒன்றா தென்னின்ஒன் றாகா தீயின்
 ஒன்றிரும் புறழின் அன்றாம் உயிரின்ஐந் தொழிலும் வேண்டும்
 ஒன்றிநின் றுணரு முண்மைக் குவமைஆ ணவத்தோ டொன்றே."
- சிவப்பிரகாசம், 87.
(1)
 
இப்பிறவி என்னுமோர் இருட்கடலில் மூழ்கிநான்
    என்னுமொரு மகரவாய்ப்பட்
  டிருவினை எனுந்திரையின் எற்றுண்டு புற்புதம்
    எனக்கொங்கை வரிசைகாட்டுந்
துப்பிதழ் மடந்தையர் மயற்சண்ட மாருதச்
    சுழல்வந்து வந்தடிப்பச்
  சோராத ஆசையாங் கானாறு வான்நதி
    சுரந்ததென மேலும்ஆர்ப்பக்
கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமுங்
    கைவிட்டு மதிமயங்கிக்
  கள்ளவங் கக்காலர் வருவரென் றஞ்சியே
    கண்ணருவி காட்டும்எளியேன்
செப்பரிய முத்தியாங் கரைசேர வுங்கருணை
    செய்வையோ சத்தாகிஎன்
  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
     (பொ - ள்) "இப்பிறவி . . . . . . . . . வந்தடிப்ப" - (பெறுதற்கரிய) இம் மானுடப் பிறவியென்று சொல்லப்படும் ஒரு பெரிய கருங்கடலினுள் மூழ்கி, நான் நான் எனவும் (எனது எனது எனவும்) செருக்கெனவும் கூறப்படுகின்ற ஒருபெரிய சுறாமீனின் வாய்ப்பட்டு (அறம் பாவம் எனவும் நல்வினை தீவினை எனவும் சொல்லப்படும்) இருவினையென்னும் பெரிய அலைகளால் முன்னும் பின்னுமாக மொத்துண்டு, நீரிற்றோன்றும் குமிழி போன்று காணப்படும் முலை ஒழுங்கினைக் காட்டுகின்ற பவழம் போன்ற செவ்விய வாயிதழ்களையுடைய மங்கைப்பருவப் பெண்பாலார் உடைய, நீங்கா மயக்கமென்று சொல்லப்படும் சுழற்சியையுடைய பெரிய சூறைக்காற்றானது இடைவிடாது பலமுறை வந்து அடித்துக்கொண்டிருப்ப;

 
 1. 
'ஒன்றிரண்டாய்' வினாவெண்பா, 10.